சாவர்க்கர் பேரன் வழக்குப் போடுவேன் என்றதும் சாவர்க்கர் பற்றிய ட்வீட்களை ராகுல் காந்தி நீக்கியதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று சாவர்க்கரின் பேரன் கூறிய நிலையில் சாவர்க்கர் பற்றி தான் போட்ட அனைத்து ட்வீட்களையும் டெலீட் செய்த ராகுல்.
மதிப்பீடு
விளக்கம்
சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு அவர் மீது வழக்குப் போடுவேன் என சாவர்க்கர் பேரன் எச்சரிக்கை விடுத்த நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாவர்க்கர் பற்றி பதிவிட்ட பதிவுகளை எல்லாம் ராகுல் காந்தி நீக்கி உள்ளார் என ட்விட்டர் ஸ்க்ரீன்சார்ட் ஒன்றை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
சம்பவம் 🔥🔥🔥
சாவர்க்கர் மீது தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சித்து வருவதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று சாவர்க்கரின் பேரன் கூறிய நிலையில் சாவர்க்கர் பற்றி தான் போட்ட அனைத்து ட்வீட்களையும் டெலீட் செய்த ராகுல்😂 pic.twitter.com/QxpHk022FB— Devasena🔱 (@priashakthi) March 28, 2023
உண்மை என்ன ?
குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உடன் ராகுல் காந்தியின் எம்.பி பதவி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தியிடம், இங்கிலாந்து பயணத்தின் போது இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கூறி வருவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ” என் பெயர் சாவர்க்கர் அல்ல. நான் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன் ” எனப் பதில் அளித்து இருந்தார்.
மன்னிப்பு கேட்கும் விசயத்தில் ராகுல் காந்தி சாவர்க்கர் பெயரைக் குறிப்பிட்டு பேசியதையடுத்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
VIDEO | “How can a person (Rahul Gandhi), who insults a community, compare himself with Savarkar Ji? I will definitely file a case against him,” says Savarkar’s grandson @RanjitSavarkar on Rahul Gandhi’s ‘Not a Savarkar’ remark. pic.twitter.com/ilwOdUCCs7
— Press Trust of India (@PTI_News) March 28, 2023
இதையடுத்து, ராகுல் காந்தி எப்படி தன்னை சாவர்க்கர் உடன் ஒப்பிடலாம். அவருடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் என சாவர்க்கர் பேரன் ராஜீவ் சாவர்க்கர் பிடிஐ-க்கு மார்ச் 28ம் தேதி பேட்டி அளித்து இருந்தார்.
இதையடுத்து, ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாவர்க்கர் பற்றி பதிவிட்ட ட்வீட்கள் அனைத்தையும் நீக்கி விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Twitter Advanced Search மூலம் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் சாவர்க்கர் பெயர் குறித்து தேடுகையில், அப்படி எந்த பதிவுகளும் இடம்பெறவில்லை எனக் காண்பித்தது. அதேநேரத்தில், ராகுல் காந்தி சாவர்க்கர் பற்றி பதிவிட்டு நீக்கியதாகக் கூறும் பதிவுகள் ஏதும் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தரவுகளை காப்பகப்படுத்தி ஆவணப்படுத்தும் socialblade எனும் இணையதளத்தில் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் குறித்து தேடுகையில், கடந்த சில நாட்களில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து எந்தப் பதிவுகளும் நீக்கப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
ஒரு ட்விட்டர் கணக்கில் தேடப்படும் கீவார்த்தை(சாவர்க்கர்) பயன்படுத்தாமல் இருந்தாலும் எந்தப் பதிவும் இல்லை என்றே ட்விட்டரில் காண்பிக்கப்படும். ராகுல் காந்தி தனது பேட்டிகளின் மூலம் வாய்வழியாக மட்டுமே சாவர்க்கர் பற்றிப் பேசி இருக்கிறார்.
LIVE: सत्य की राह पर, देश के लिए, मैं हर कीमत चुकाने को तैयार हूं | Special Press Briefing | AICC HQ https://t.co/fvu5m9ZYP4
— Rahul Gandhi (@RahulGandhi) March 25, 2023
அதுமட்டுமின்றி, மார்ச் 25ம் தேதி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில், என் பெயர் சாவர்க்கர் அல்ல. நான் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன் எனப் பேசிய வீடியோ(27.42நிமிடம்) தற்போதும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் உள்ளது.
மேலும் படிக்க : 2013ல் காங்கிரசின் தகுதி நீக்க மசோதாவை ராகுல் காந்தி கிழித்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !
மேலும் படிக்க : ராகுல் காந்தி வெளிநாடுகளில் ‘ராகுல் ராஜீவ் பெஃரோஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் படம் !
இதற்கு முன்பாக, ராகுல் காந்தி குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சாவர்க்கரின் பேரன் கூறிய பிறகு சாவர்க்கர் பற்றி பதிவிட்ட அனைத்து ட்வீட்களையும் ராகுல் காந்தி நீக்கியதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.