சாவர்க்கரின் சிறை அறை, நேருவின் சிறை வசதி எனப் பரப்பப்படும் தவறான ஒப்பீடு !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவர்ஹலால் நேரு சுதந்திரப் போராட்டத்தின் போது கைது செய்து அடைக்கப்பட்டிருந்த சிறையின் அறையில் கட்டில், மெத்தை, நாற்காலி என வசதிகள் இருந்ததாகவும், ஆனால், சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் அப்படி எந்த ஒரு வசதியும் இல்லை என இரண்டு புகைப்படங்களை மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவண பிரசாத் பாலசுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
சரவண பிரசாத் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் நேரு, சாவர்க்கரின் சிறை குறித்துத் தேடினோம்.
சாவர்க்கர் சிறை :
நாசிக் மாவட்ட ஆட்சியர் கொலை வழக்கில் 1910ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீண்டும் 1911ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்வாண்டு ஜுலை மாதம் 11ம் தேதி அந்தமான் செல்லுலார் சிறைக்கு சாவர்க்கர் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் 1921ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி அந்தமானிலிருந்து ரத்னகிரி சிறைச்சாலைக்கு சாவர்க்கர் மாற்றப்பட்டு உள்ளார்.
Among those imprisoned at Cellular Jail was the great Veer Savarkar. I visited the cell where the indomitable Veer Savarkar was lodged. Rigorous imprisonment did not dampen Veer Savarkar’s spirits and he continued to speak and write about a free India from jail too. pic.twitter.com/dbsyzuVUjA
— Narendra Modi (@narendramodi) December 30, 2018
சரவண பிரசாத் பதிவிட்டுள்ள படம் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் செல்லுலார் சிறை அறையின் புகைப்படம்தான். பிரதமர் மோடி 2018ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி சாவர்க்கர் இருந்த சிறையைப் பார்வையிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டதும் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவரது சிறை புகைப்படங்கள் ‘Alamy’ இணையதளத்திலும் உள்ளது.
சாவர்க்கர் அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குள் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதியதாகவும், அங்கிருந்த 9 ஆண்டுகளில் 6 முறை மன்னிப்புக் கடிதங்களைக் கொடுத்துள்ளார் என்றும் ‘பிபிசி’ கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து அவர் ஓய்வூதியம் பெற்றதாகவும் உள்ளது.
ஜவர்ஹலால் நேரு சிறை :
நேரு இருந்த சிறை ஆடம்பரமாக இருந்ததாகப் பதிவிடப்பட்ட புகைப்படத்தைக் கூகுளில் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அது அகமது நகர் கோட்டை சிறையில் நேரு வைக்கப்பட்டிருந்த அறை என்பதை அறிய முடிந்தது. ‘I Love Nagar’ என்னும் யூடியூப் பக்கத்தில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜவஹர்லால் நேரு மற்றும் அகமது நகர் என்னும் தலைப்பில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளனர். அதில் அவ்வறையினையும் காண முடிகிறது.
1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நேரு கைது செய்யப்பட்டு அகமது நகர் கோட்டையின் ஒரு பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்தியக் கலாச்சார அமைச்சரக இணையதள தகவலின்படி நேரு அதிக நாட்கள் சிறையிலிருந்தது இம்முறைதான்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நேரு ஒன்பது முறை கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் 3259 நாட்கள் இருந்துள்ளார். அவ்வாறு ஒன்பதாவது முறையாகக் கைது செய்யப்பட்டபோது அகமது நகர் கோட்டை சிறையில் 963 நாட்களும், பரேலி மத்தியச் சிறையில் 72 நாட்களும், அல்மோரா சிறையில் 6 நாட்கள் என மொத்தம் 1041 நாட்கள் சிறையிலிருந்துள்ளார். அக்காலகட்டத்தில்தான் ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்னும் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
இவற்றைத் தவிர்த்து லக்னோ மாவட்ட சிறை, அலகாபாத் மாவட்ட சிறை, நைனி மத்தியச் சிறை, டேரா டூன் சிறை எனப் பல சிறைகளில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
சாவர்க்கர் நாசிக் மாவட்ட ஆட்சியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனையாக 50 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு பிறகு நேரு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவை இரண்டையும் ஒப்பிடுவதே சரியான அணுகுமுறையாக இருக்காது.
முடிவு :
நம் தேடலில், சாவர்க்கர் மற்றும் நேரு குறித்து பரப்பப்படும் புகைப்படங்கள் உண்மை. ஆனால், ஒப்பீடு தவறானது. சாவர்க்கர் இரட்டை ஆயுள் தண்டனையால் 1911-1921 வரை அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேரு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக 1942ல் அகமது நகர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது.