அரசு பணி தேர்வுகளில் பொருளாதார இடஒதுக்கீடுக்கு மிகக்குறைவான கட் ஆஃப் !

பரவிய செய்தி
சற்றுமுன் வெளியான எஸ்பிஐ கிளர்க் முதல்நிலைத்தேர்வு முடிவுகள் !! எஸ்சி/எஸ்டி/பிரிவினருக்கும் EWS-க்கு உள்ள கட் ஆஃப் மதிப்பெண் வித்தியாசத்தை பாருங்கள். பொதுப்போட்டி, எஸ்சி, ஓபிசி எல்லாம் ஒரே கட் ஆஃப் என்கிற அளவுக்குக் கடுமையான போட்டி உள்ள தேர்வில் 28.5 மதிப்பெண் EWS-க்கு வழங்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு முன்னதாக இடஒதுக்கீடு குறித்து விமர்சித்தவர்கள் பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அவசியம் என தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். ஆனால், இதனால் சமூகநீதி பாதிப்படையும் என எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் கிளர்க் பணிகளுக்கான தேர்வு முடிவில் எஸ்.சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடையே ஒரே கட் ஆஃப்(61.25) இருக்கும் நிலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு கட் ஆஃப் 28.5 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன. இது உண்மையா என ஆராய்ந்து பார்த்தோம்.
எஸ்பிஐ வங்கி தேர்வு :
எஸ்பிஐ வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கான தேர்வுகள் ஜூன் 22,23 மற்றும் 30-ம் தேதி நடைபெற்றன. முதல்நிலைத் தேர்வுகளின் முடிவுகளே தற்பொழுது வெளியாகின. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒருவரின் தேர்வு முடிவைப் பார்க்கையில், பொது பிரிவினர், ஓபிசி, எஸ்சி என மூன்று பிரிவினருக்கும் ஒரே கட் ஆஃப் ஆக 61.25 என நிர்ணயித்து உள்ளனர். எஸ்.டி பிரிவினருக்கு 53.75 என நிர்ணயித்து உள்ளனர்.
ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு கட் ஆஃப் 28.5 மதிப்பெண்கள் மட்டுமே என வெளியாகி இருந்தன. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மத்திய அரசு 10% இடஒதுக்கீடு அளிப்பதாக கூறிய நிலையில், அவர்களுக்கான கட் ஆஃப் 28.5 மதிப்பெண்கள் மட்டுமே நிர்ணயித்து உள்ளனர்.
எஸ்.டி பிரிவினருக்கு நிர்ணயித்த 53.75 மதிப்பெண்களில் பாதி அளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தபால்துறையில் !
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு எஸ்பிஐ வங்கி தேர்வில் மட்டும் அல்ல தபால்துறை, பெல் நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் கூட இடஒதுக்கீடு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தமிழக தபால்துறையில் 2019 Gramin Dak Sevak தேர்வின் முடிவுகளில்(தேர்வானவர்கள் மதிப்பெண்ணுடன்) பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் இடஒதுக்கீடு(EWS) முறை இருப்பதை காணலாம். அதில், ஓபிசி, எஸ்.சி பிரிவினர் அளவிற்கு EWS பிரிவில் 80 முதல் 90 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தாலும், 58.2 மதிப்பெண் பெற்றவரும் தேர்வாகி இருப்பதை காண முடிந்தது.
பெல் நிறுவனம் :
பெல் நிறுவனத்தில் Engineer/ Executive Trainee உள்ளிட்ட பணிகளுக்காக மே 25 மற்றும் 26-ம் தேதி நடைபெற்ற தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் பொது பிரிவினருக்கு 57.396 மதிப்பெண்கள், EWS-க்கு 51.875 மதிப்பெண்கள், ஓபிசி-க்கு 53.854 மதிப்பெண்கள், எஸ்சி-க்கு 47.917 மதிப்பெண்கள், எஸ்டி-க்கு 46.354 மதிப்பெண்கள் என நிர்ணயித்து உள்ளனர். Engineer/ Executive Trainee பணிக்கான EWS கட் ஆஃப் மதிப்பெண்கள் அனைத்திலும் ஓபிசி-ஐ விட குறைவாகவும், சில பாடப்பிரிவில் எஸ்.சி பிரிவை விட குறைவாகவும் இருக்கிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு எஸ்பிஐ வங்கி, தபால்துறை, பெல் நிறுவனம் என மத்திய அரசு பணிகளில் அந்த பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, எஸ்பிஐ வங்கி தேர்வில் வெளியான குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.