This article is from Apr 07, 2019

அதானி, டாடாவிற்கு 35,000 கோடி கடன் ரத்து, விவசாயிகளுக்கு இல்லையா ?

பரவிய செய்தி

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

மத்திய அரசின் பரிந்துரையுடன் அதானி-டாடா நிறுவனத்தின் கடன் ரூ.35,000 கோடி ரத்து.

மதிப்பீடு

சுருக்கம்

2017-ல் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில், அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை இருப்பதால் தமிழகத்திற்கு மட்டும் சாத்தியமில்லை என கூறியுள்ளார். ஆனால், சில சமூக வலைதள பதிவுகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கொடுக்க முடியாது எனக் கூறியதாக திரித்து பதிவிட்டு வருகின்றனர்.

2018-ல் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பெரு நிறுவனங்களின் கடன் தள்ளுபடி குறித்த முடிவிற்கு எஸ்.பி.ஐ ஒப்புதல் அளித்தது. என்ன நிகழ்ந்தது என்பதை விரிவாக படிக்கவும்.

விளக்கம்

சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரு செய்திகள் இணைக்கப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், தமிழக விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடி செய்ய முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகவும், மறுபுறத்தில் அதானி, டாடா நிறுவனங்களின் கடன் 35,000 கோடி கடனை ரத்து செய்ய எஸ்.பி.ஐ ஒப்புதல் அளித்ததாக வெளியான செய்தி  பகிரப்படுகிறது.  இரு செய்திகளும் உண்மையே. எனினும், அதனை முழுமையாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

பொன்.ராதாகிருஷ்ணன் :  

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தியது தொடர்பாக பேட்டி அளித்து இருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ” தமிழ்நாடு விவசாயிகளுக்கு மட்டும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய சாத்தியமில்லை, இந்த விசயத்தில் தீர்மானிப்பதற்கு முன்பு நாட்டில் உள்ள சூழ்நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டும் ” எனக் கூறி இருந்தார்.

மேலும், பிரச்சனை தொடர்பாக நிதி மற்றும் விவசாயக அமைச்சகம் கலந்து ஆலோசிப்பதாகவும் கூறி இருந்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில், அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை இருப்பதால் தமிழகத்திற்கு மட்டும் சாத்தியமில்லை என கூறியுள்ளார். ஆனால், சில சமூக வலைதள பதிவுகளில் தமிழகத்திற்கு மட்டும் கொடுக்க மறுப்பது போன்று தவறாக பதிவிட்டு வருகின்றனர்.

அதானி, டாடா நிறுவனத்தின் கடன் ரூ.35,000 கோடி தள்ளுபடி : ஏன் ?

2018 அக்டோபரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதானி, டாடா, Essar ஆகிய பெரு நிறுவனங்களின் ரூ.35,000 கோடி அளவிலான கடனை ரத்து செய்ய ஒப்புதல் அளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

குஜராத் மாநிலத்தின் முந்த்ரா பகுதியில் உள்ள அதானியின் மின் உற்பத்தி நிலையம் 4,620 MW , டாடா முந்த்ரா ஆலையில் 4,000 MW மற்றும் சலயாவில் உள்ள Essar ஆலையில் 1,200 MW மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையம்.

இம்மூன்று நிறுவனங்களுடன் குஜராத் மாநில அரசு Power Purchase  agreement(PPA) எனும் ஒப்பந்தத்தை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு மின் உற்பத்தி செய்கின்றனர். மின் உற்பத்தி ஆலைக்கு தேவையான நிலக்கரி இந்தோனேசியா நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. 2010-ல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலக்கரியின் விலை அதிகரிக்கத் தொடங்கிய பிறகு ஏற்கனவே மாநில அரசுடன் நிறுவனங்கள் செய்துக் கொண்ட ஒப்பந்த விலைக்கு மின்சாரத்தை அளிக்க முடியவில்லை என நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

கட்டண விலையை உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற வழக்கில் ஏப்ரல் 11, 2017-ல் உச்ச நீதிமன்றம் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது மற்றும் மாநில அரசுடன் மேற்கொண்ட PPA ஒப்பந்தத்தில் உள்ள விலைக்கே அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து 2017  வருடமே மூன்று பெரு நிறுவனங்களும் தனித்தனியாக குஜராத் மாநில அரசை அணுகியுள்ளனர். இதில், ஏற்கனவே சரிவர இயக்காமல் இருக்கும் Essar நிறுவனம் உள்பட மூன்று நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்க முடியாது என்பதால் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாகக் கடிதம் வாயிலாகத் தெரிவித்தனர். இதன்பின்னர், குஜராத் மாநில அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இக்குழு கடந்த செப்டம்பர் 2018-ல் இரண்டு பரிந்துரையை முன் வைத்தனர். இக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரை Gujarat urja vikas nigam ltd (GUVN) மற்றும் குஜராத் மாநில அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

“  பெரு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதன்படி கட்டண விலையை அதிகரிக்கலாம் அல்லது வங்கிகளில் நிறுவனங்களின் பெயரில் நிலுவையில் இருக்கும் தொகையை நீக்கலாம் “ என பரிந்துரை செய்தனர். வங்கிகள் விருப்பம் இருந்தால் இதனை செய்யலாம் என்றே அறிவுறுத்தினர்.

பின் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். அதில், எஸ்.பி.ஐ வங்கியும் இடம்பெற்றது. கூட்டத்தில் குஜராத் அரசு அமைத்த குழுவின் முடிவை பரிந்துரை செய்தது மத்திய அரசு.

இதைத் தொடர்ந்து GUVN சார்பில் விண்ணப்பங்கள் நகர்த்தப்பட்டன மற்றும் PPA வில் திருத்தங்கள் கொண்டு வர அனுமதி அளிக்குமாறு குஜராத் அரசு நீதிமன்றத்தை அணுகியது. GUVN சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எஸ்.பி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.

எஸ்.பி.ஐ மனுவின் படி, வங்கிகளின் கூட்டமைப்பில் 2017 மார்ச் 31-வரை உள்ள அதானி நிறுவனத்தின் 19,127 கோடி, Essar powe-ன் 4,214 கோடியும், டாடா முந்த்ராவின் 10,159 கோடியும் தள்ளுபடி பெறுவர். இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் எஸ்.பி.ஐ வங்கி பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூலிக்காத நிலையில் சிக்கியுள்ளதை அனைவரும் அறிவர்.

குஜராத்தின் மின் உற்பத்தி பெரு நிறுவனங்களான அதானி, டாடா, எஸ்ஸார் ஆகியவற்றிற்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை 35,000 கோடியை நெருங்குகிறது. ஏற்கனவே, வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு சாதமாக இயங்குகிறது என்று நாடு தழுவிய குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில் எஸ்.பி.ஐ வங்கி மற்றும் மத்திய அரசின் இத்தகைய முயற்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader