அண்ணாமலையிடம் சிறந்த பள்ளிகளைக் கேட்பதாக மாணவியின் படத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
எங்களுக்கு நிச்சயமாக சிறந்த பள்ளிகள் தேவை. மாணவியின் குரல்…! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்க்கும் நாள் ஏப்ரல் 14…! தமிழகத்தின் மாற்றத்திற்கான நாள். இது தாங்க நேரம்..! இனி எல்லாம் மாறும்..!
மதிப்பீடு
விளக்கம்
சில மாதங்களுக்கு முன்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பட்டியலை ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் தற்போது சமூக வலைதளங்களில் “எங்களுக்கு சிறந்த பள்ளிகள் தேவை அண்ணாமலை அண்ணா! அன்பில் மகேஷ் சொத்து விவரங்களை வெளியிடுங்கள்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்ட பதாகையை ஏந்திய மாணவியின் புகைப்படத்தை பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர.
We definitely need better schools. @annamalai_k @Anbil_Mahesh pic.twitter.com/XGiNg3sLA4
— N.R.Navaneethakrishnan (@NaveenkrishY) April 12, 2023
மேலும் அந்தப் பதிவுகளில் “சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்க்கும் நாள் ஏப்ரல் 14…! தமிழகத்தின் மாற்றத்திற்கான நாள். இது தாங்க நேரம்..! இனி எல்லாம் மாறும்..!” என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவிவரும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், 2019 நவம்பர் 29 அன்று ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்தின் போது நிகழ்ந்த மாணவிகளின் போரட்டம் தொடர்பான புகைப்படம் இது என்பது உறுதியானது.
மேலும் ஆய்வு செய்கையில், BBC தன்னுடைய தளத்தில் 2019 டிசம்பர் 2 அன்று வெளியிட்ட செய்தியில் அந்தப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் மாணவிகள் “I AM YOUR DAUGHTER NO MORE RAPE CULTURE” என்று குறிப்பிட்ட பதாகையை ஏந்தியவாறு போராட்ட களத்தில் அமர்ந்துள்ளனர்.
மேலும் அதில் அருகில் அமர்ந்திருக்கும் மாணவி வைத்துள்ள பதாகையில் “ప్రాణం పోసే” (Life giving) என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஒவைசியை பேசவிடாமல் மௌனமாக்கி உட்கார வைத்த யோகி என பாஜகவினர் பரப்பும் எடிட் செய்த வீடியோ !
மேலும் படிக்க : நடிகர் சூர்யாவின் புதிய வீட்டில் இந்தி மொழியில் பெயர் பலகை எனப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், “எங்களுக்கு சிறந்த பள்ளிகள் தேவை அண்ணாமலை அண்ணா” என பதாகை ஏந்தி மாணவி ஒருவர் கேட்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. மேலும் புகைப்படத்தில் உள்ளவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளின் புகைப்படம் என்பதும் தெளிவாகிறது.