ஹிஜாப் அணிந்ததற்காக பள்ளியில் சிறுமி தாக்கப்படுவதாகப் பரவும் இந்தோனேஷியா வீடியோ !

பரவிய செய்தி
ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது . மாணவர்களிடையே விதைக்க பட்ட விஷம் இன்று நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
ஹிஜாப் அணிந்ததற்காக வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் மேஜைக்கு அடியில் முகத்தை மறைத்துக் கொண்டு அழும் ஒரு மாணவியை மூன்று மாணவர்கள் சேர்ந்து கொண்டு கம்பால் அடிப்பதையும், காலால் அந்த மாணவியை உதைப்பதையும் காண முடிகிறது.
ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது .
மாணவர்களிடையே விதைக்க பட்ட விஷம் இன்று நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது . pic.twitter.com/pIQv4HQsPO— Qualified MP ⚪️ (@AalenOff) September 20, 2023
ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது .
மாணவர்களிடையே விதைக்க பட்ட விஷம் இன்று நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது 😠#BJPFailsIndia #novoteforbjp pic.twitter.com/lG6jKK74nz— Kovai Nithya (@KovaiNithya) September 20, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, இந்தோனேஷியாவின் புர்வோரெஜோவில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து ‘Tribunjabar.id.’ என்ற இந்தோனேஷிய இணையதளத்தில் கடந்த 2020 பிப்ரவரி 13 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தோனேஷியாவின் புர்வோரெஜோவில் 3 மாணவர்களால் தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நடுநிலைப் பள்ளி மாணவியின் தற்போதைய நிலை” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
மேலும் அதில், “முன்னதாக, நீட் பூர்வொரேஜோவில் உள்ள முஹம்மதியா நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது . வீடியோவில் , மாணவர்கள் பல முறை தகாத செயல்களைச் செய்கிறார்கள். மத்திய ஜாவாவின் ஆளுநர் கஞ்சர் பிரனோவோ, மத்திய ஜாவா மாகாண அரசுப் பணியின் தலைவரை பூர்வோரேஜோவுக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தோனேஷியாவின் “Liramedia” ஊடகமும் கடந்த 14 பிப்ரவரி 2020 அன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் குழந்தைகளாக இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்கும் போது அவர்களுடன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் செல்வார்கள். மூவர் மீதும் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் 80வது பிரிவின் கீழ் 3.5 வருடங்கள் அபராதத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவாலயமா ?
மேலும் படிக்க: திருவாரூர் கால்வாயில் காவிரி நீருடன் அடித்து செல்லப்படும் குப்பைகள் எனப் பரப்பப்படும் இந்தோனேசியா வீடியோ !
முடிவு:
நம் தேடலில், இந்தியாவில் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவி தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ கடந்த 2020ல் இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.