வயதான புரோகிதருக்கும், பள்ளி மாணவிக்கும் திருமணம் நடப்பதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
தாத்தாவும் பேத்தியும் என்று நினைக்காதீர்கள் வட இந்திய புரோகிதருக்கு திருமணமாம்
மதிப்பீடு
விளக்கம்
ஒரு வயதான புரோகிதருக்கும், பள்ளி மாணவிக்கும் திருமணம் நடப்பதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையுடன், தலையில் சிவப்பு நிற சால்வை அணிந்த ஒரு மாணவியும், ஒரு வயதானவரும் மாலை மாற்றிக்கொள்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.
WTF, A 15 year old girl married to a 65 year old uncle, we become blind? #BusAccident #RoadAccident, #Article370 #SupremeCourt, #JammuAndKashmir #TataGroup #StrongerTogether pic.twitter.com/7FMqvBoD51
— Srishti Kanwar (@SrishtiKanwar22) July 11, 2023
மேலும் இந்த வீடியோ யூடியூப் பக்கங்களில் இதே செய்திகளுடன் அதிகமாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ உண்மையான நிகழ்வல்ல, ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
V Earth Music என்ற யூடியூப் பக்கத்தில் “9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை 70 வயது முதியவர் திருமணம் செய்தார், பிறகு என்ன நடந்தது” என்ற தலைப்பில் இதன் முழு வீடியோவானது பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், பள்ளி மாணவி ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதை மறைப்பதாகவும், பின்னர் அந்த மாணவியின் வீட்டினர், அவளுக்கு விருப்பமான ஒரு வயதானவருடன் திருமணம் செய்து வைப்பதாகவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும் அதில் உள்ளவர்கள் போஜ்புரி மொழியில் பேசியிருப்பதையும் அறிய முடிகிறது.
எனவே இந்த யூடியூப் பக்கம் குறித்து ஆய்வு செய்ததில், இந்த சேனலை நடத்துபவர் பெயர் பாட்னாவைச் சேர்ந்த தீபக் குமார் என்பதையும், பள்ளி சீருடை அணிந்த மாணவியின் பெயர் அங்கிதா மற்றும் அந்த வயதானவரின் பெயர் சத்யநாராயணா என்பதையும் அறிய முடிந்தது.
இதேபோன்று, மற்றொரு வீடியோவிலும் இந்த வீடியோவில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது. இதன் மூலம் இவர்கள் இந்த வீடியோவைப் போன்றே பல வீடியோக்களில் நடித்து வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க : ஜாதி குறித்து நரிக்குறவர் பெண்ணின் பதில் என வைரலாகும் சித்தரிக்கப்பட்ட யூடியூப் வீடியோ !
மேலும் படிக்க : முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என வலதுசாரிகள் தவறாகப் பரப்பும் சித்தரிப்பு வீடியோ !
முடிவு :
நம் தேடலில், வயதான புரோகிதருக்கும் பள்ளி மாணவிக்கும் திருமணம் நடப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.