தேள் கடித்த உடன் தண்ணீரில் கை வைத்தால் விஷம் இறங்கிவிடுமா ?

பரவிய செய்தி

தேள் கொட்டியது என்றால் யாரிடமும் சொல்லாமல் தண்ணீரில் கை விட்டு விட்டீர்கள் என்றால் விஷம் இறங்கி கடித்த இடத்திலேயே நின்றுவிடும் – சீமான் 

மதிப்பீடு

விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “தேள் கொட்டிவிட்டால், ‘தேள் கொட்டிவிட்டது’ எனச் சொன்னீர்கள் என்றால் விஷம் ஏற ஆரம்பிக்கும். தேள் கொட்டியதும், நல்ல துணிவுடன் யாரிடமும் சொல்லாமல் தண்ணீருக்குள் கையை விட்டு விட வேண்டும். 

Archive link 

அப்படிச் செய்தால். விஷம் எங்கு இருந்தாலும் இறங்கி வந்து கடித்த இடத்திலேயே நின்றுவிடும். பிறகு சிறிது நேரம் வலித்து பின் வலி சரியாகிவிடும். இது வேறு யாரோ அனுபவித்தது இல்லை. நானே அனுபவித்தது” எனக் கூறியுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

தேள் கடித்ததும் யாரிடமும் சொல்லாமல் தண்ணீரில் கையை வைத்தால் சரியாகிவிடும் எனச் சீமான் பேசியது குறித்த காணொளியை யூடியூபில் தேடினோம். வெள்ளிமலை என்ற படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் சீமான் பேசிய 35 நிமிட வீடியோ கிடைத்தது.

அவ்வீடியோவில் இயற்கை மருத்துவம், உணவு முறை எனப் பலவற்றைப் பேசியுள்ளார். அதில், 33வது நிமிடத்தில் தேள் கொட்டுவதைப் பற்றிப் பேசியுள்ளார்.

அது குறித்து மருத்துவர் பிரவீனை தொடர்பு கொண்டு பேசினோம். தேள் கடித்ததும், கடித்த இடத்தில் தாங்க முடியாத அளவிற்கு வலி இருக்கும் (Local reaction). அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக படபடப்பு, வியர்த்தல், தலைச் சுற்றல், மயக்கம், BP அதிகரிப்பதோ குறைவதோ ஆகலாம். அனைத்து தேள் கடியிலும் இரண்டாவதாகச் சொன்ன அறிகுறிகள் வருவதில்லை. 

பொதுவாகத் தேள் கடித்தவர்களை மருத்துவமனையில் கண்காணிப்பார்கள். பெரும்பாலும் முதல் அறிகுறியான வலி, மறுத்துப் போதல் ஏற்படும். அதனைத் தாண்டி இரண்டாவதாகக் கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் அதன் தீவிர தன்மையைப் பொறுத்து  சிகிச்சை அளிக்கப்படும். 

அந்த அறிகுறிகள் இல்லாதவர்களுக்குத் தேள் கடித்ததற்கான Pain relief மருந்து கொடுத்தாலே போதுமானது என தெரிவித்தார். மேலும், தண்ணீரில் வைத்தால் சரியாகாது என்பதையும் கூறினார்.

24 மணிநேரமும் ஆக்சிஜனை வெளியேற்றும் மரம் உள்ளதா ?

அதே வீடியோவில், 19வது நிமிடத்திற்கு மேல், “துளசி செடி 20 மணிநேரம் ஆக்சிஜனையும், 4 மணிநேரம் ஓசோன் வாயுவையும் வெளியிடுகிறது.” வேப்ப மரம் பகலில் மட்டும் தான் ஆக்சிஜனை வெளியிடும். இரவில் கார்பன்டை  ஆக்சிஜனை வெளியிடும்.

ஆனால், “ஆலமரமும் அரசமரமும் 24 மணிநேரமும் ஆக்சிஜனை வெளியிடும்” எனப் பேசியுள்ளார். இது நீண்ட காலமாக இந்து கோயில்களில் ஆலமரமும் அரசமரமும் இருப்பதற்கு காரணமாக பலரும் சமூக வலைத்தளங்களிலும், வாட்சப்களிலும் பரப்பி வரும் செய்தியாகும்.

இது குறித்து வேளாண் ஆராய்ச்சியாளர் ஜி.கே.தினேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகையில், எந்த மரமும் 24 மணி நேரம் ஆக்சிஜனை வெளியேற்றாது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும். ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளியுள்ள பகல் நேரத்தில் மட்டுமே தாவரங்களில் நிகழ்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே ஒரு தாவரம் ஆக்சிஜனை வெளியேற்றும். இதனைத் தவிர்த்து கார்பன்டை ஆக்சைடை தான் வெளியேற்றும் என கூறினார். 

இவர் அளித்த விளக்கத்தின்படி ஆலமரம், அரசமரம் மட்டுமல்லாமல், எந்த தாவரமும் 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியேற்றாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.. 

துளசி செடி ஓசோன் வாயுவை வெளியிடுவது குறித்துத் தேடினோம். இது தொடர்பாக, ‘பிபிசி தமிழில்’ 2020ம் ஆண்டு நவம்பர் மாதம், ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில், துளசி செடி ஓசோன் வெளியிடும் என்பது கற்பனையான வாதம். உண்மையில் ஓசோனை வெளியிடும் உயிரினம் எதுவும் இல்லை என இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.

ஓசோன் உருவாகும் சூழல்கள் : 

வளிமண்டல மேலடுக்கான ஸ்ட்ரேடோஸ்பியரில் ஆக்சிஜன் மூலக்கூறுகளோடு, சூரியனின் ஆற்றல் வினை புரிந்து ஓசோன் உருவாகிறது. சூரியனின் இன்னொரு கதிர்வீச்சால் அது சிதையவும் செய்கிறது. மின்னல் அடிக்கும்போது உண்டாகும் அதீத ஆற்றல் காரணமாகக் கொஞ்சம் ஓசோன் உற்பத்தியாகிறது. எரிமலை வெடிப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் கொஞ்சம் ஓசோன் உற்பத்தியாகிறது. இவை மூன்றும்தான் இயற்கையில் ஓசோன் உற்பத்தியாகும் சூழ்நிலைகள்.

மேலும் படிக்க : தேள் கடித்தவருக்கு வாழ்நாளில் இதய நோய் வராமல் இருக்குமா?| உண்மை அறிவோம்.

இதே போல், தேள் கடித்து மருத்துவம் பார்த்த நபருக்கு இதய நோய் வராது என்ற தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இது குறித்த உண்மை தன்மை யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், தேள் கையில் கடித்த உடன் தண்ணீரில் வைத்தால் விஷம் இறங்கி விடும் எனச் சீமான் கூறியது தவறான தகவல். தேள் கடித்ததும் மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுகுவது நல்லது. 

கூடுதல் தகவல் : 

சீமான் பேச்சு தொடர்பாக நாம் வெளியிட்ட கட்டுரை தொடர்பான பதிவை குறிப்பிட்டு வாழ்வியல் என்ற டிவிட்டர் பக்கத்தில்,” CAM (Crassulacean Acid Metabolism) தாவரம் ” குறித்து இரு ஸ்க்ரீன்சாட்களை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருந்தார். அந்த இரு ஸ்க்ரீன்சாட்களின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் 1: “ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சூரியனிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கும் செயல்முறையாகும். தாவரங்கள் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடையும், மண்ணிலிருந்து நீரையும் பயன்படுத்தி சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்குகிறது. பெரும்பாலான தாவரங்கள் பகலில் மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால், கற்றாழை, ப்ரோமிலியாட்கள் (bromeliads) மற்றும் சில சதைப்பற்றுள்ள தாவரங்கள் (succulents) என சில விதிவிலக்குகளும் உண்டு.

CAM எனப்படும் மாற்று ஒளிச்சேர்க்கை பாதையை நம்பியுள்ள இவ்வகை தாவரங்கள் நீர் இழப்பைக் குறைக்கப் பகல் நேரங்களில் இலைகளிலுள்ள ஸ்டோமாட்டாவை மூடி வைக்கிறது. இரவில் ஸ்டோமாட்டா திறந்து சிறிது ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

படம் 2: இதே போல் இரவு நேரங்களில் அரசமரம் (Peepal tree) கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பகிர்ந்த இரு ஸ்க்ரீன்சார்ட்களில், 24 மணி நேரமும் அரசமரம் ஆக்சிஜனை வெளியேற்றும் என எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதில் துளசியின் பெயரும் குறிப்பிடவில்லை. மேலும், அவர் பகிர்ந்த ஸ்க்ரீன்சார்ட் பக்கங்கள் குறித்து தேடிய போது, அவை அதிகாரப்பூர்வ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரை தளங்களோ அல்ல.

ஆகையால், இது குறித்து வேளாண் ஆராய்ச்சியாளர் ஜி.கே.தினேஷிடம் விரிவாகக் கேட்டறிந்தோம். அவர் கூறியதாவது, “CAM பிளான்ட் என்பவை தண்ணீரை மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே பகல் நேரங்களில் பெரும்பாலும் ஒளிச்சேர்க்கை செய்யாது. அப்படிச் செய்தாலும் குறைவாகவே ஒளிச்சேர்க்கை செய்யும். இதனால், இத்தாவரங்கள் பகல் நேரங்களில் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடாது.

மேலும், இவ்வகை தாவரங்கள் இரவு நேரங்களில் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடும். இம்மாதிரியான தாவரங்களையே இன்டோர் பிளான்டுகளாக வளர்கிறோம். ஆனால், எந்த தாவரமும் 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடாது. அவர் கூறியது அறிவியல்பூர்வமாகத் தவறுதான் எனக் கூறினார்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader