தேள் கடித்தவருக்கு வாழ்நாளில் இதய நோய் வராமல் இருக்குமா?| உண்மை அறிவோம்.

பரவிய செய்தி
உங்களுக்கு தெரியுமா ?
ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்து விட்டால், அவருக்கு அறுவை சிகிச்சையோ , ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை . தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது . இதைபோல் , தேனீ கொட்டியவர்களுக்கு இரத்த கொதிப்பு வராது . செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது. சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது. இவைகளின் விஷம் தான் ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது .
மதிப்பீடு
விளக்கம்
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மருத்துவர்களின் பரிந்துரைகள், மருத்துவ தகவல்கள் எனக் கூறும் பதிவுகளை பார்த்தவர்கள், அத்தகைய மருத்துவ தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை கூட யோசிக்காமல் உடனே பகிர்வது எதார்த்தமே. எனினும், இவ்வாறான பதிவுகளை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டி இருக்கிறது.
தேள் கடித்தால் உடலுக்கு தீங்கு என அறிந்த நமக்கு, அந்த தேள் கடித்து மருத்துவம் பெற்ற பிறகு அவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கும் என ஓர் மருத்துவ தகவல் சமீப வைரல். பலரும் இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இப்படி சுற்றி வரும் தகவல் சில உண்மைத் தகவலையும் இணைத்தே சுற்றி வருகிறது .
- தேளில் உள்ள மார்க்கட்டீன் என்ற விஷம் மனிதருக்கு இதய இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது .
- தேனீ கொட்டியவர்களுக்கு இரத்த கொதிப்பு வராது .
- செய்யான் (பூரான்) கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது.
- சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது.
இத்தகவலில் முதல் வரி மட்டுமே உண்மையை கொண்டிருக்கிறது. எனினும், அதுவும் முழுவதும் உண்மையில்லை.
மார்கோடாக்சின் :
2010 அக்டோபர் 22-ம் தேதி பிபிசி செய்தி தளத்தில் தேளின் கொடுக்கில் இருக்கும் விஷம் தொடர்பான ஆய்வு குறித்து ” Scorpion sting ‘heart bypass aid ” என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், ஒரு வகையான தேளின் கொடுக்கில் இருக்கும் மார்கோடாக்சின் இருப்பதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இது இதயத்தின் செயலிழப்பை தடுப்பதாக கூறி இருந்தனர்.
எனினும், இந்த ஆய்வானது செல் சார்ந்தவையே , மனிதர்களுக்கு மருந்துகள் மூலம் சோதிக்கப்படவில்லை . மேலும், இது ஆரம்பக்கட்ட ஆய்வுகள் மட்டுமே . 2010-க்கு பிறகு தற்பொழுது வரை அந்த மூலப்பொருளை வைத்து மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக எந்தவொரு தரவுகளும் இல்லை. ஏனெனில், அதை மாத்திரை அல்லது ஊசி வடிவில் எடுத்துக் கொள்வது சாத்தியமில்லாதது. அதைப் பற்றி இங்கே விரிவாக படிக்கவும்.
ஆனால், இந்த செய்தி வெளியான போது அது பல தவறான கருத்துக்களை உருவாக்கியது . எனவே, என்.எச்.எஸ் லண்டனின் அதிகாரப்பூர்வ சுகாதார சேவையின் இணையதளத்தில் 2010 அக்டோபர் 25-ம் தேதி அவை தொடர்பாக தெளிவுப்படுத்தி இருந்தனர். அதனை இங்கே விரிவாக படிக்க.
daily mail என்ற செய்தி தளம் வெளியிட்ட செய்தி தவறானது என்று தெளிவுப்படுத்த விளக்கி உள்ளனர். இது இருதய பைபாஸூக்கு மாற்றாகவோ அல்லது தீர்வாகவோ இல்லை . அதை உறுதிப்படுத்த பல ஆய்வுகள் தேவை. லண்டன் சுகாதார சேவை தரப்பில் இருந்து கிடைத்த தகவலே போதுமான ஆதாரம் .
மேலும் , ஆய்வில் கூறப்படும் தேள் வகையானது இந்தியாவில் காணப்படவில்லை. இவை பெரும்பாலும் மத்திய அமெரிக்க உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுவதாக கூறுகின்றனர். அனைத்து தேள்களும் அல்ல . இந்தியாவில் காணப்படும் தேள்கள் கொட்டினால் திடீரென இரத்த கொதிப்பு மற்றும் இருதய அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இதைத் தவிர்த்து, மற்ற பூச்சிகள் குறித்து இணைக்கப்பட்ட தகவலுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. தேள் கொடுக்கின் ஆய்வு குறித்த செய்தியுடன் தவறாக அதையும் இணைத்துக் கொண்டனர் .
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து , தேளில் இருக்கும் மார்கோடாக்சின் மனிதர்களுக்கு வாழ்நாளில் இதய பைபாஸூ பிரச்சனையை வராமல் தடுக்கும் எனக் கூறுவது தவறான தகவல்.
மார்கோடாக்சின் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் நேரடியான ஆய்வுகளோ அல்லது பயன்படுத்தக்கூடிய முறையோ இல்லை. இதை லண்டன் சுகாதார சேவை தளத்தில் தெளிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதிலும், மார்கோடாக்சின் ஒரு வகையான தேள்களில் மட்டுமே காணப்படுகின்றன . இந்திய தேள்கள் தீண்டினால் உடலுக்கு பாதிப்புகளே ஏற்படும். உடனடியாக சிகிச்சை பெறுவதே சிறந்தது.