செகந்திராபாத் கோவிலுக்குள் பைபிள் கொடுத்தவரை அர்ச்சகர் அறைந்தாரா ?

பரவிய செய்தி
செக்கந்திராபாத் கோயிலுக்குள்ள போய் பைபிள நீட்டுனா விட்டார் பாரு செவுல்லேயே ஒரு அரை.. பூணூல் போட்டுருந்தா பூ பறிப்பாங்கன்னு நினைச்சிட்டாங்க போல.
மதிப்பீடு
விளக்கம்
செகந்திராபாத் பகுதியில் உள்ள கோவிலுக்குள் பைபிள் புத்தகத்தை கொடுத்துக் கொண்டு இருந்த ஒருவரை அர்ச்சகர் அறைந்ததாக 30 நொடிகள் கொண்ட சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
செகந்திராபாத் கோவிலில் ஒருவரை அர்ச்சகர் அறைந்த சம்பவம் குறித்து தேடுகையில், “செகந்திராபாத்தில் உள்ள பிரபல விநாயகர் கோவிலில் பக்தர் ஒருவரை அர்ச்சகர் அறைந்ததாக” மார்ச் 6-ம் தேதி telangana deccannews எனும் யூடியூப் சேனலில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், ” கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த பக்தரை தாக்கியதற்காக ஹைதராபாத் அர்ச்சகர் கைது ” என இந்தியா டுடே மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செய்திகள் கிடைத்தது.
” பிப்ரவரி 27-ம் தேதி செகந்திராபாத் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பக்தர் ஒருவர் நுழைந்ததற்காக அர்ச்சகர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அர்ச்சகர் பிரபாகர் சர்மன் என்பவர் வால்மீகி ராவ் என்ற பக்தரை தாக்கி உள்ளார். இதற்கு அடுத்தநாள் அர்ச்சகர் மீது பக்தர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஹைதராபாத் போலீசார் அர்ச்சகரை கைது செய்தனர் ” என இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பக்தரை தாக்கிய கோவில் அர்ச்சகர் மீது இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி) பிரிவு 323 மற்றும் 502 கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. செகந்திராபாத் கோவில் அர்ச்சகர் பக்தரை தாக்கியதாகவும், பக்தரின் பெயர் வால்மீகி ராவ் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. பக்தரை அறைந்த அர்ச்சகர் கைதும் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோவை மதம் சார்ந்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், செகந்திராபாத் கோவிலுக்குள் சென்று பைபிள் கொடுத்தவரை அர்ச்சகர் அறைந்து வெளியேற்றியதாக பரவும் சிசிடிவி வீடியோ தவறானது. அந்த வீடியோவில் அர்ச்சகர் பக்தர் ஒருவரையே தாக்கி இருக்கிறார். இதனால் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது.