கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதை பந்துகளை தூவிய மாணவி !

பரவிய செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 8000 கி.மீ தொலைவுக்கு 4 லட்சம் விதை பந்துகள் நட போகும் 7 ஆம் வகுப்பு மாணவி ரக்சனா.. கிட்டத்தட்ட 5 லட்சம் செலவு செய்து லாரியில் இந்தியா முழுக்க 20 வகையான விதைகள் வீதம் 4 லட்சம் விதை வைக்க பயணிக்கிறார். இந்த சிறுமி ஏற்கனவே 80000 மரங்கள் நட்டுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
மரங்களை அதிக அளவில் நட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் விதை பந்துகள் புதுவித முயற்சியாக பலரும் முன்னெடுத்து வருகின்றனர். உரங்களுடன் விதையை கொண்டிருக்கும் விதை பந்துகளை செல்லும் வழிகளில் தூவிச் சென்றால் பின்னாளில் மரமாய் வளர்ந்து நன்மையளிக்கும் எண்ணத்தில் பல அமைப்புகள் விதை பந்துகளை இலவசமாகவே வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ரக்சனா என்பவர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 4 லட்சம் விதை பந்துகளை தூவுவதற்கான பிரச்சார பயணத்தை துவங்க உள்ளதாக மீம் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள முற்பட்டோம்.
கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ரவீந்தரன்-சங்கீதா தம்பதியரின் மகள் ரக்சனா அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தீவிர சமூக ஈடுபாடு கொண்ட மாணவி ரக்சனா மரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு வழங்கியது உள்ளிட்ட சேவையை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாணவி ரக்சனாவின் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 2019 பிப்ரவரி மாதம் தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரூ1 லட்சம் வழங்கி இருந்தார்.
தன் பகுதியைச் சுற்றியுள்ள 108 கிராமங்களில் 50,000-க்கும் அதிகமான மரக்கன்றுகளை வழங்கியது உள்ளிட்ட பல சாதனைகளை மேற்கொண்டு இருந்தார் மாணவி ரக்சனா. மேலும், உலக மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக 2,400 கோடி விதை பந்துகளை உலகம் முழுவதும் தூவ வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஜூன் 2019-ல் புவி வெப்பமயமாதலை தடுக்க கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் சுமார் 8,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு 4 லட்சம் விதை பந்துகளை தூவும் முயற்சியை துவங்கினார். விதை பந்துக்கள் நிறைந்த லாரியில் பயணித்து ஒரு கிலோ மீட்டருக்கு 50 விதை பந்துகள் வீதம் 4 லட்சம் விதை பந்துகளை செல்லும் பாதையில் தூவ வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருந்தார்.
தன்னுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் தூவ இருக்கும் 4 லட்சம் விதை பந்துகளை தன்னுடைய பள்ளி விளையாட்டு திடலில் அனைவரின் பார்வைக்காக காட்சிப்படுத்தினார். ஜூன் மாதம் தொடங்கிய பயணம் 30 நாட்களை கடந்து ஜூலை மாதம் வெற்றிகரமாக முடிவடைந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி உள்ளது.
தனது பயணத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய டிவிடி-ஐ தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு அனுப்பியும் வைத்துள்ளார். புவி வெப்பமயமாதலால் உருவாகும் பிரச்சனைகளுக்கு எதிராக பள்ளி மாணவி மேற்கொண்ட முயற்சி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
மரம் வளர்ப்போம் ! அனைத்து உயிர்களையும் காப்போம் !