சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா ?

பரவிய செய்தி
அற்புதம்மாள் வேதனை.. சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன். இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை – பேரரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
மதிப்பீடு
விளக்கம்
ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது. காங்கிரஸ் மட்டுமின்றி பல கட்சிகளின் சார்பிலும் சீமான் தன் பேச்சை திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தன் பேச்சினை திரும்ப பெற போவதில்லை என சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியதற்கு எதிராக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் வேதனை தெரிவித்து உள்ளதாக நியூஸ்7 தமிழ் செய்தி சேனலின் நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய தீர்மானித்தோம்.
நியூஸ் கார்டு :
முகநூலில் வலம் வரும் நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஆராய்ந்த பொழுது, ” பேரறிவாளனின் தாயார் ” என்பதற்கு பதிலாக ” பேரரறிவாளனின் தாயார் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றன. எழுத்து பிழை மட்டுமின்றி செய்திக்கு பின்னே செய்தி சேனலின் லோகோ இடம்பெறவில்லை.
அடுத்ததாக, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் முகநூல் பக்கத்திற்கு சென்று அக்டோபர் 16-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக தேடிப் பார்த்தோம். அதில், அதே தேதியில் , அதே நேரத்தில் சீமான் குறித்து திருமாவளவன் அவர்களின் கருத்து இடம்பெற்று இருக்கும் நியூஸ் கார்டை ஒன்றை காண நேரிட்டது. அதிலும், சீமானின் இந்த புகைப்படமே இடம்பெற்று இருக்கிறது.
நியூஸ்7 தமிழ் சேனலில் அக்டோபர் 16-ம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியான செய்தியில், ” ராஜீவ் கொலையில் சர்வதேச சதி உள்ளது என்பதை பலரும் சொல்லி இருக்கின்றனர். ராஜீவ் காந்தியை கொன்றதாக விடுதலைப்புலிகள் எந்த இடத்திலும் சொல்லவில்லை ” என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அந்த நியூஸ் கார்டை போட்டோஷாப் செய்து வதந்திகளை பரப்பி உள்ளனர் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. முதன்மை ஊடக செய்திகளின் நியூஸ் கார்டுகள் மூலம் போலியான தகவல்கள், வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இங்குள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.