அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசித்தாரா சீமான் ?

பரவிய செய்தி
பெண்டாட்டி புள்ள குடும்பம்…. ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ன்னு நினைப்பு வந்துட்டா…. அத்தி வரதரை தரிசனம் செய்து கோவிந்தா சொல்லு #தமிழா. இது மட்டும் வட இந்திய சாமி இல்லைடா. காஞ்சிபுர சாமியடா… புரியுதா #தமிழா
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பேச்சுகளில் தமிழ் தேசியம் மற்றும் தமிழர் கடவுள் வழிபாடு குறித்து தொடர்ந்து குறிப்பிடுபவர். குறிப்பாக, வட நாட்டு கடவுள், தமிழர்களின் ஆதிக் கடவுள் என பேசும் சீமான் காஞ்சிபுரம் அத்திவரதரை தன் மனைவி மற்றும் குழந்தை என குடும்பத்துடன் சென்று தரிசித்து வந்ததாக மேற்கண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சீமான் தன் குடும்பத்துடன் காஞ்சியில் உள்ள அத்திவரதரை சந்தித்ததாக கூறும் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம், முதலில் சீமான் காஞ்சியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதரை தரிசித்தது தொடர்பான செய்திகள் குறித்து தேடினோம்.
முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வருவது நிச்சயம் செய்திகளில் வெளியாகும். ஆனால், முதன்மை செய்தி ஊடகம் தொடங்கி சிறு செய்தி இணையதளம் வரையில் எதிலும் சீமான் அத்திவரதரை தரிசித்ததாக செய்திகள் வெளியாகவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலாகும் சீமான் உடைய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் குடும்பத்துடன் அத்திவரதரை சந்தித்தாக கூறும் பதிவுகளை மட்டுமே காண முடிந்தது. பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தியை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” இது முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக காளிமுத்து அவர்களின் நினைவிடத்திற்கு அண்ணண் சீமான் தன் குடும்பத்துடன் விருதுநகருக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். அதனைத் திரித்து காஞ்சியில் அத்திவரதரை சந்திக்க சென்றதாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
இதுமட்டுமின்றி, மேலும் சில ஆதாரங்கள் முகநூலில் கிடைத்துள்ளன. ஜூலை 2019-ல் சீமான் குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் விழாவை காளிமுத்து அவர்களின் நினைவிடத்தில் வைத்து நடத்தி உள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, சமீபத்தில் சீமான் விருதுநகரில் காளிமுத்து அவர்களின் நினைவிடத்தில் தனது குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சியை நடத்திய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அத்திவரதரை குடும்பத்துடன் காண சென்றதாக தவறாக பரப்பி வருகின்றனர். பரவிய படமும், நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களும் ஒன்றாக இருப்பதை காண்க.