சீமான் வீட்டுக்கு வீடு கார் தருவதாக கூறினாரா? | எந்த “கார்” ?

பரவிய செய்தி
வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் – சீமான்.
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் வருகிற தேர்தலில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பேன் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் என பேசியதாக ஊடகங்களில் வெளியாகி விவாதமாகவும், சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.
சீமான் தேர்தல் அறிக்கையில் கார் அளிப்பதாக கூறியதாக தந்தி டிவி செய்தியில் வெளியான நியூஸ் கார்டை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால், சில பதிவுகளில் மட்டுமே அவர் ” எந்த கார் ” வழங்குவதாக கூறினார் என்பது வெளியாகி இருக்கிறது.
மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதாவது செய்து மேலே வந்துவிடுங்கள் என நண்பர்கள் என்னிடம் கூறுகின்றனர். அதனால் வரும் தேர்தலில் வீட்டுக்கு வீடு ஓர் காரினை இலவசமாக கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளேன்.
சீமான் கார் தருகிறார் என அனைவரும் எனக்கு வாக்களித்து பெற்றி பெற செய்து விடுவார்கள். நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் கொடுக்கும் திட்டம் அறிவித்து, ஒவ்வொரு வீடாகச் சென்று இதுதான் கார் என “ அம்பேத்கார் “ படத்தைக் கொடுப்போம். இவர்தான் உலகத்திலேயே பெரிய கார் அண்ணல் அம்பேத்கார், இவரின் படத்தை மாட்டுங்கள் எனச் சொல்வோம் ” எனக் கூறியுள்ளார்.
சில நாட்களாக சீமானின் பேச்சுக்கள் எதிர்மறையான கருத்துக்களுக்கு அதிகம் உள்ளாகி வருவதை மக்களும் கவனித்து வருகின்றனர். ஈழ இறுதிப் போரில் உணவு உண்ட போது நிகழ்ந்த அனுபவம் என சீமான் பேசிய பேச்சுக்கள் கடுமையான கிண்டலுக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, அவர் அடுத்த தேர்தலில் கார் வழங்குவதாக கூறிய நகைச்சுவை பேச்சை சிலர் கண்டித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர். முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட வேண்டும்.