பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தாரா ?|வைரலாகும் படம்.

பரவிய செய்தி
பிஜேபி, சிவசேனா கட்சி பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மதிப்பீடு
சுருக்கம்
2012-ம் ஆண்டில் மும்பை தாராவி பகுதியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பிஜேபி, சிவசேனா கூட்டணியில் போட்டியிட்ட தமிழர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான். இதனைப் பற்றி நாம் தமிழர் கட்சி வலைத்தளத்திலும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
விளக்கம்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பகிரப்படும் செய்திகளில் பிஜேபி, சிவசேனா கட்சி வேட்பாளர் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் அமர்ந்து இருக்கும் படங்களும் ஒன்று.
மேடையில் அமர்ந்து இருக்கும் சீமானிற்கு பின்னால் பிஜேபியின் தாமரை மற்றும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னங்கள் இடம்பெற்று இருக்கும். 2012-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் போட்டியிட்ட தமிழர் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பரப்புரை செய்தார் சீமான்.
இதில், 178-வது வார்டில் பிஜேபி, சிவசேனா, இந்திய குடியரசு கட்சி கூட்டணில் போட்டியிட்ட உமேஷ் ஜெயவந்த், சயான் கோல்லிவாடாவில் உள்ள 168-வது வார்டில் பிஜேபி சார்பாக போட்டியிட்ட தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான்.
இத்தேர்தலில் தமிழ்ச்செல்வன் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார் எனவும், மும்பை மாநகராட்சி தேர்தலில் பரப்புரை செய்தது குறித்தும் நாம் தமிழர் கட்சியின் வலைத்தளத்தில் 2012 பிப்ரவரி 17-ம் தேதி செய்தியாக வெளியாகி இருக்கிறது.
சீமான் பிஜேபி, சிவசேனா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்கு முன்பே ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை காரணமான காங்கிரஸ் எங்கும் வெற்றிப் பெறக் கூடாது என்பதற்காக பிரச்சாரம் செய்வோம் எனக் கூறி இருந்தனர்.
2012-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2019 நாடாளுமன்ற தேர்தலின் தருணத்தில் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.