சிறைக்கு பயமெனில் விசத்தை குடியுங்கள் என சீமான் கூறியதாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி
சிறைதான் சிந்தனையைச் செதுக்கும் பட்டறை. தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணி அல்ல. சிறைக்கு பயமெனில் விசத்தைக் குடித்து சாவுங்கள் – சீமான், நாம் தமிழர் கட்சி.
மதிப்பீடு
விளக்கம்
அவதூறு, வதந்தி பரப்புவதாக சீமான் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதும், பொதுக்கூட்டத்தில் அவர்கள் மீது தாக்குதல் நிகழ்வதும் என சமீப காலங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்புடைய பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவதும், சிறைக்கு செல்வதும் புதிதல்ல.
— Dravidian Stock (@Dravidan_Stock) December 21, 2021
இந்நிலையில், தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணி அல்ல. சிறைக்கு பயமெனில் விசத்தைக் குடித்து சாவுங்கள் என சீமான் கூறியதாக தந்திடிவி நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஒரு கட்சித் தலைவர் தன் தொண்டர்களை சிறையில் இருந்து பிணையெடுக்க மாட்டோம் என நேரடியாக கூறுவதில்லை. இப்படியொரு கருத்தை சீமான் கூறியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. டிசம்பர் 20-ம் தேதியன்று இதுபோன்ற டெம்ளேட் வடிவில் எந்த செய்தியையும் தந்திடிவி முகநூல் பக்கம் வெளியிடவில்லை.
தந்திடிவி நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். சீமான் குறித்து பரவும் நியூஸ் கார்டு போலியானது என தந்திடிவி சேனலும் தெரிவித்து உள்ளது.
முடிவு :
நம் தேடலில், சிறைதான் சிந்தனையைச் செதுக்கும் பட்டறை. தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணி அல்ல, சிறைக்கு பயமெனில் விசத்தைக் குடித்து சாவுங்கள் என சீமான் கூறியதாக பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.