போலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா ?

பரவிய செய்தி
துறையூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் இயக்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார்.
மதிப்பீடு
விளக்கம்
துறையூர் அருகே உள்ள பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலையை காவல்துறை கண்டுபிடித்து சீல் வைத்து உள்ளதாகவும், சீமானின் உறவினர் கைது செய்து உள்ளதாகவும் நியூஸ்7 தமிழ் உடைய நியூஸ் கார்டு மற்றும் செய்தி பதிவின் புகைப்படங்கள் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.
Facebook post link | archived link
Dumeels என்ற முகநூல் பக்கத்தில் பதிவான நியூஸ்7 தமிழ் உடைய நியூஸ் கார்டு மற்றும் செய்தி ஆகியவற்றின் புகைப்படங்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இப்பதிவை பிற முகநூல் குழுக்களில் பலரும் பகிர்ந்தும் வருகின்றனர். ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
2019 பிப்ரவரி 21-ம் தேதி குறிப்பிட்டு இருக்கும் நியூஸ்7 தமிழ் செய்தியின் நியூஸ் கார்டில் ” துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான கள்ளச்சாராய ஆலைக்கு போலீசார் சீல் ! மேனேஜர் தப்பி ஓட்டம் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்கள். கீழே உள்ள செய்தியில், ” துறையூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் இயக்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆக, இரண்டு பதிவிலும் முரண் இருப்பதை காணலாம்.
துறையூர் அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார்!
விவரம் : https://t.co/burzylZ0Ks | https://t.co/5wMBD3FLqB | #IllegalLiquorsFactory pic.twitter.com/PJ1zD6Kw2r
— News7 Tamil (@news7tamil) February 20, 2019
நாம் தமிழர் கட்சியினர் இயக்கி வந்த மதுபான ஆலை குறித்து நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தி குறித்து ஆராய்ந்த பொழுது, 2019 பிப்ரவரியில் நியூஸ்7 தமிழ் உடைய ட்விட்டர் பதிவில் அதே புகைப்படத்துடன் ” துறையூர் அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார் ” என்றே வெளியிட்டு உள்ளனர்.
News7 tamil link | archived link
இதேபோல், நியூஸ்7 தமிழ் செய்தியின் இணையதளத்தில் ” துறையூர் அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார்! ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், கடத்தலில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரை கைது செய்த போலீசார் போலி மதுபான ஆலையை நடத்தி வந்த உரிமையாளரை தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும், அதில் அரசியல் பின்னணி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தினமலர் இணையதள செய்தியில் போலி மதுபான ஆலை நடத்திய 2 பேர் கைது என்றே செய்தி வெளியிட்டு இருந்தனர். அதிலும், அரசியல் பின்புலம் குறித்து எந்தவொரு வார்த்தையும் இல்லை.
மேலும், நியூஸ் கார்டில் சீமான் உறவினர் என காண்பிக்கப்பட்ட புகைப்படம் தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல. கேரளா கள்ளுக்கடை குறித்து 2010-ல் வெளியான செய்தியில் அதே புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. கள்ளுக்கடையில் போலீசார் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தி நியூஸ்7 தமிழ் பெயரில் ஃபோட்டோஷாப் செய்து உள்ளனர்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, துறையூர் அருகே போலி மதுபான ஆலையை காவல்துறை பிடித்து இருந்தாலும், நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டதாக நியூஸ்7 தமிழ் செய்தியில் குறிப்பிடவில்லை. அவ்வாறு செய்திகள் வெளியாகவில்லை.
நியூஸ்7 தமிழ் செய்தியின் நியூஸ் கார்டில் கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி ஃபோட்டோஷாப் செய்து சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலை என வதந்திகளை பரப்பி வருகின்றனர்.