மணிப்பூரில் 13 வயது பெண்ணை முதுகில் சுட்டுக் கொன்றதாக மியான்மர் படத்தை காண்பித்து பேசிய சீமான் !

பரவிய செய்தி
மணிப்பூர் நிர்வாணத்தைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் மணிப்பூரில் இந்த 13 வயது பெண்ணை புறமுதுகில் சுட்டானே, அது பற்றி ஏன் பேசவில்லை – சீமான்
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமீப காலமாகவே அனைவரின் பார்வையும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தலைமையில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி ஆளும் பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது.
மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பையும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் காண முடிந்தது. அந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ள போஸ்டரில் மணிப்பூர் தொடர்பான படங்களுடன், ஒரு பெண்ணை ராணுவ வீரர் ஒருவர் சுடுவது போன்ற புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் இதற்கு முன்பே வைரலாகப் பரவிவந்த, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று ஒரு பெண்ணை சித்திரவதை செய்து பின்னர் சாலையின் நடுவில் சுட்டுக் கொன்றதைக் காட்டும் 2:20 நிமிட வீடியோவுடன் தொடர்புடையது என்பதையும் அறிய முடிந்தது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்: வள்ளுவர் கோட்டம் சென்னை#NTKDemandsJustice_4ManipurViolence
நேரலை: https://t.co/qR1DooaStR pic.twitter.com/EirByNUhVy
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) July 30, 2023
மேலும் மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில், சீமான் பேசியது குறித்து நாம் தமிழர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஆய்வு செய்த போது, அவர் பேசிய முழு வீடியோவின் தொகுப்பும் கிடைத்தது.
அதில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி வன்புணர்வு செய்ததை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் மணிப்பூரில் இந்த 13 வயது பெண்ணை புறமுதுகில் சுட்டார்களே, அது பற்றி ஏன் பேச மறுக்குறீர்கள்? என்று கூறி ஆர்பாட்ட மேடையில் ஒட்டப்பட்டிருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை சுட்டிக் காட்டி அவர் பேசியிருப்பதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
இந்தப் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது மணிப்பூர் கலவரத்தோடு தொடர்புடைய புகைப்படம் அல்ல என்பதையும், கடந்த 2022 ஜூன் மாதத்தின் போது மியான்மரில் நடந்த சம்பவத்தோடு தொடர்புடையது என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. எனவே இந்த போஸ்டரில் மணிப்பூர் கலவரத்தோடு இந்தப் புகைப்படம் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து மேலும் தேடியதில், இந்தப் புகைப்படம் தொடர்பாக டிசம்பர் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகளை இர்ராவதி மற்றும் மிஸ்ஸிமா ஆகிய இணையதளங்களில் காண முடிந்தது. அதில், “இராணுவ ஆட்சிக் குழுவின் தகவலறிந்த மற்றும் பியூ சா ஹ்டீ போராளியாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண், ஆயுதம் ஏந்திய பலரால் சாலையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்த பெண் ஆய் மார் துன், வயது 24 (ஆசிரியை) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்ளூர் PDF உறுப்பினர்களை கொலை செய்ய வழிவகுத்த இராணுவ ஆட்சிக்குழுவிற்கு இவர் தகவல் கொடுத்ததற்காக 2022 ஜூனில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள NUG அரசாங்கத்தின் கேபினெட் அமைச்சரான யு ஆங் மியோ மின், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மட்டுமன்றி, உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து Ludunwayoo இணையதளம் 2022 டிசம்பர் 04 அன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !
இதற்கு முன்பும் சமூக ஊடகங்களில் இப்போது பரவி வரும் அதே புகைப்படத்துடன் தொடர்புடைய வீடியோவை பகிர்ந்து, ஆயுதமேந்திய ஒரு கும்பல் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு குக்கி கிறிஸ்தவப் பெண்ணை சித்திரவதை செய்து பின்னர் சாலையின் நடுவில் சுட்டுக் கொன்றதாக தவறாக செய்திகள் பரவி வந்தன. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அப்போதே கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
முடிவு:
நம் தேடலில், சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேடையில் ஒட்டப் பட்டிருந்த புகைப்படத்தைக் காட்டி மணிப்பூரில் 13 வயது பெண் சுட்டுக்கொல்லப்பட்டதாக சீமான் பேசிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என்பதையும், அந்த புகைப்படம் கடந்த 2022-இன் போது மியான்மரில் நடந்த சம்பவத்தோடு தொடர்புடையது என்பதையும் அறிய முடிகிறது.