பாஜக தலைவர்களை சீமான் ரகசியமாக சந்தித்ததாக தினகரன் வெளியிட்ட தவறான செய்தி !

பரவிய செய்தி
பா.ஜ தலைவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரகசியமாக சந்தித்தது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் பரபரப்பாய் சென்றுக் கொண்டிருக்கையில், தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பை நிகழ்த்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தை ” பாஜக தலைவர்களுடன் சீமான் ரகசிய சந்திப்பு ” என தலைப்பில் நாளிதழ் ஒன்றில் செய்தியாவே வெளியிட்டு இருந்தனர்.
சீமான், பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அர்ஜுன் சம்பத் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் குறித்து வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
அந்த தலைப்பை வைத்து தேடுகையில், மார்ச் 13-ம் தேதி தினகரன் நாளிதழே அப்படியொரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. தினகரனின் இணைய பக்கத்திலும் அதே செய்தி பதிவாகி இருக்கிறது. புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்னவென்று தெரியாமல், நாம் தமிழர் கட்சி அழைப்பை எடுக்கவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
சீமான், வானதி ஸ்ரீனிவாசன், அர்ஜுன் சம்பத் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமீபத்தில் நிகழ்ந்த ரகசிய சந்திப்பு அல்ல. கடந்த 2017-ம் ஆண்டிலேயே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கிறது.
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி, ” சிறப்பு பட்டிமன்றம் :“இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி… சாத்தியம்? சாத்தியமில்லை ? ” எனும் தலைப்பில் நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலில் வெளியான சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் போதே இப்புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு பட்டிமன்றத்தில் சீமான், வானதி ஸ்ரீனிவாசன், அர்ஜுன் சம்பத், நாஞ்சில் சம்பத், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளனர். வைரலாகும் புகைப்படத்தில் சீமானுக்கு அருகே நாஞ்சில் சம்பத் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.
தேர்தல் தருணம் என்பதால் சமூக வலைதளங்களில் போலியான செய்திகள், வதந்திகளை பரப்பி விடுவது அதிகரித்து வருகிறது. பழைய புகைப்படத்தை தற்போதைய தேர்தல் சந்தர்ப்பத்தில் தவறாய் பரப்பி வருவதை தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக பரப்பப்படும் புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகக் கூறி புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறியாமல் தினகரன் செய்தி நிறுவனமும் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.