சீமான் தன் வங்கி கணக்கிற்கு கட்சி நிதியை வழங்குமாறு கேட்டதாக பரவும் போலியான அறிக்கை !

பரவிய செய்தி
அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை எமது தொப்புள் கொடி புலம்பெயர் உறவுகள் யாரும் கட்சியின் வங்கிக் கணக்கிற்கு நிதி அனுப்ப வேண்டாம். கட்சி பணத்தை கையாடல் செய்து, உண்டு கொழுத்த புல்லுருவிகள் மீதான விசாரணை நடைபெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் என்னுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வழக்கமான நிதியை அனுப்பி வைத்து தமிழனத்திற்கான கடமையை செய்யவும் – உங்கள் நேசத்திற்குரிய சீமான்
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் மீது கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவருமே கட்சியில் இருந்து விலகுவதாக பதிவிட்டனர்.
இந்நிலையில், கட்சியின் பணத்தை சிலர் கையாடல் செய்து உள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்கள் தங்கள் நிதியை கட்சியின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக தனது சொந்த வங்கி கணக்கிற்கு நிதியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாக அக்கட்சியின் அறிக்கை ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, சீமான் உடைய சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்கையில் அப்படி எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. சமீபத்தில், செப்டம்பர் 10-ம் தேதி ” பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் ” எனும் அறிக்கையே வெளியாகி இருக்கிறது.
பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
https://t.co/kGtJjmrY4Z pic.twitter.com/SZ9sWzasbT
— சீமான் (@SeemanOfficial) September 10, 2020
மேற்கொண்டு அக்கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி அவர்களை யூடர்ன் தொடர்பு கொண்டு பேசிய போது, பரப்பப்படும் அறிக்கை போலியானது என மறுத்துள்ளார். பரப்பப்படும் அறிக்கையில் தேதி, கட்சியின் இணைய முகவரி போன்றவை ஏதும் இடம்பெறவில்லை. கட்சியின் அறிக்கை தாளில் ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.