2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார் என சீமான் கூறியதாக தவறாக தலைப்பிட்ட தந்தி டிவி!

பரவிய செய்தி
2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார் என அதிரடியாக பேசிய சீமான் – தந்தி டிவிTwitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் கடந்த ஜூன் 11 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா 2024-ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. எனவே தமிழ்நாட்டு மக்கள் இதற்கு 25 தொகுதிகளை வென்று கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
மேலும் அக்கூட்டத்தில், “தமிழகத்தில் இருந்து ஒருவர் பிதமராக வர வேண்டும், அதுவும் ஏழைக் குடும்பத்திலிருந்து பிதமராக வர வேண்டும், அதை பாஜகவால் தான் செய்ய முடியும்” என்று பேசினார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தந்தி டிவி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், “2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார்” என்று கூறியதாக தலைப்பிட்டு தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
“2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார்..” – அதிரடியாக பேசிய சீமான்#2024election #bjp #pmmodi #ntk #seeman #speech #thanthitvhttps://t.co/WReb7v3tir
— Thanthi TV (@ThanthiTV) June 15, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து சீமான் பேசிய வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் பேசியதை தந்தி டிவி தவறான தலைப்புடன் பகிர்ந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து சீமான் பேசியுள்ள வீடியோவின் முழுப்பகுதியை Newstamil24x7 தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேற்று (ஜூன் 14) வெளியிட்டிருந்தது. அதில் நிரூபர் ஒருவரின், “தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை பிரதமராக ஆக்குவோம் என்கிறார்களே?” என்ற கேள்விக்கு, பதிலளித்து பேசியுள்ள சீமான், “இவை வாக்குகளைப் பிரிப்பதற்கான நுட்பம், எப்போதும் பாஜக இவ்வாறு தான் செய்யும்.
அதிகமாக தமிழைப் பற்றி பாஜக பேசும். நான் இங்கு அவ்வாறு பேசி வளர்கிறேன் பார்த்தீர்களா? அதே மாதிரி ஈழத்தைப் பற்றியும் பேசும், நாங்கள் அங்கே சாகும் போது எந்தப் பக்கம் தலை வைத்து படுத்திருந்தீர்கள். சிங்களம் என்றால் இந்து ரத்தம் என்று சொன்னீர்கள், அப்போது கங்கையில் போய் மூழ்கி கொண்டிருந்தீர்களா என்ன? இலங்கை இந்திய நட்புறவு என்கிறீர்கள், என்ன நாடகம் இது?” என்று பேசினார்.
மீண்டும் தொடர்ந்த அவர், “சரி அமைச்சர் சொல்லுவது போல தமிழர் பிரதமராக வரட்டும், ஆனால் எப்போது? விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது, எப்போது? சரி 2024 வது தேர்தலில் ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள், நாங்கள் எல்லாரும் ஆதரிச்சு உங்களுக்கு வேலை செய்கிறோம், வாக்கு செலுத்திவிட்டு போகிறோம். அமித்ஷாவிற்கு அந்த துணிவு இருக்கிறதா ?
2024-இல் ஒரு தமிழ் பிரதமர், யாரு தம்பி அண்ணாமலையா? இல்ல அம்மா தமிழிசையா? இல்லை அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணனா? யாரு அதை சொல்லணும்ல? அவ்வாறு எதுவும் செய்யாமல் வாயிலேயே வடை சுட்டு, இன்னும் எத்தனை காலத்திற்கு எங்கள் தமிழர்களை ஏமாற்றுவீர்கள்? இவ்வளவு வைத்துக்கொண்டு தமிழனை வேட்பாளராக எப்போதோ அறிவிப்போம் என்கிறார்கள்? அதை நீங்கள் சொல்ல வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்வோம்.” என்று அவர் ஆவேசமாக பேசியுள்ளதைக் காண முடிந்தது.
இதன் மூலம் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிதமராக வர வேண்டும், அதை பாஜகவால் தான் செய்ய முடியும் என்று அமித்ஷா கூறியதற்கு, அவர்கள் அவ்வாறு செய்ய வாய்ப்பேயில்லை, தமிழ், தமிழர் என்று சொல்லி ஏமாற்றுவதாகப் பேசியதை தந்தி டிவி தவறான தலைப்புடன் வீடியோ வெளியிட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், சீமான் “2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார்” என்று கூறியதாக தந்திடிவி தவறான பொருள் கொள்ளும்படி தலைப்புடன் வெளியிட்டு இருக்கிறது. அமித்ஷாவின் பேச்சிற்கு, 2024வது தேர்தலில் ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள், நாங்கள் எல்லாரும் ஆதரிச்சு உங்களுக்கு வேலை செய்கிறோம், வாக்கு செலுத்திவிட்டு போகிறோம். அமித்ஷாவிற்கு அந்த துணிவு இருக்கிறதா ? என ஆவேசமாக கேள்வியையே எழுப்பி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.