ஸ்டெர்லைட்-க்கு எதிராக நான் போராட சொல்லவில்லை: சீமான் பல்டி.. ஆதாரங்கள் இதோ !

பரவிய செய்தி
“ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று நான் சொல்லவே இல்லை”என்று நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் முன் சீமான் பயந்து மண்டியிட்டது உண்மையா, இல்லையா? அண்ணன் பென்சிலைக்கூட உடைக்க மாட்டாரு, அவுரு பேசுறதயெல்லாம் சீரியசா எடுத்துகிட்டு… – மருதையன்
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தான் சொல்லவில்லை என நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவிடம் தெரிவித்ததாக மக்கள் கலை இலக்கிய கழக (மகஇக) முன்னாள் செயலாளர் மருதையன் டிவீட் செய்துள்ளார்.
இதையடுத்து, ஆணையத்திடம் சீமான் அப்படிக் கூறவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மருதையன் பதிவிற்குப் பதில் அளித்து, நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த மருதன் (ThangarajPon) என்பவர் டிவீட் செய்துள்ளார்.
அண்ணன் சீமான் அருணாஜெகதீசன் ஆணையத்தில் சாட்சியம் அளிக்கும் போது வழக்கறிஞர் என்ற வகையில் நான் உடன் இருந்தேன்! "நான் மக்களை போராட்டாத்திற்க்கு அழைத்தேன்! போராட கேட்டுக்கொண்டேன்!கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினேன்! "எனத்தான் சாட்சியம் அளித்தார்! இன்றும் ஆணைய அறிக்கையில் அறியலாம்! https://t.co/jRLXP3lO77 pic.twitter.com/3S5nAt5nAW
— மருதன்! (@ThangarajPon) February 2, 2023
அப்பதிவில், சீமான் அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி அளிக்கும் போது வழக்கறிஞர் என்ற வகையில் தான் உடன் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீமான் அவர்கள் “நான் மக்களை போராட்டாத்திற்கு அழைத்தேன்! போராடக் கேட்டுக் கொண்டேன்! கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினேன்!” என்றுதான் ஆணையத்திடம் கூறினார். இதனை இன்றும் ஆணையத்தின் அறிக்கையில் அறியலாம் எனக் கூறியுள்ளார்.
உண்மை என்ன ?
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவாகச் சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், அரசியல் இயக்கங்கள், மீனவ அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அதில் கலந்து கொண்டு பேசிய சீமான் “நினைவுச்சின்னம் வைக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. கடலுக்குள் வைக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். எங்கு வேண்டுமானாலும் வையுங்கள். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு வரும்” எனப் பேசிக் கொண்டு இருக்கும் போது திமுகவைச் சேர்ந்தவர்கள் சீமானுக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.
தொடர்ந்து பேசிய சீமான் “கத்துபவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பேசுகிறோம். கடலிலும் கடற்கரையிலும் 8551.13 சதுர மீட்டர் இடத்தினை எடுக்கிறீர்கள். அதில் நீங்கள் பேனா வைக்க வேண்டும் என்றால் கல்லைக் கொட்ட வேண்டும், மண்ணை கொட்ட வேண்டும். அதனால் வரும் அழுத்தத்தினால் அங்குள்ள பவளப்பாறைகள் பாதிக்கும்” என அவர் கூறிய போது, “அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை” என ஒருவர் மேடைக்குக் கீழ் இருந்து சத்தமிட்டுள்ளார்.
அப்போது சீமான், “உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்து இருக்கிறது? உங்களைக் கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு. நீ பேனா வைத்தால் ஒருநாள் நான் வந்து உடைப்பேன்” எனப் பேசினார்.
சீமான் இப்படிப் பேசியதற்கு திமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் மகஇக முன்னாள் செயலாளர் மருதையன், சீமான் மற்றும் ஸ்டெர்லைட் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
சீமான் கூறியதாக அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்ன உள்ளது ?
2018, மே 22ம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அவ்வாணையம், கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி தனது விசாரணை அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. சுமார் 3,000 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கை 4 பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் இரண்டாவது பாகத்தில், 210 மற்றும் 211வது பக்கத்தில் (Point No. 239) சீமான் கூறியது இடம் பெற்றுள்ளது. அதில், “இப்போது எதார்த்தமாக எழும் கேள்வி என்ன வென்றால். தனியார் மற்றும் பொதுச் சொத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பா? என்ற கேள்வி எதார்த்தமாக எழுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இப்போராட்டம் குறித்துக் கேட்கப்பட்டது.

தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் சிலருக்குக் காயங்களும் ஏற்பட்டது. ஆனால், நான் சொல்லி எனது கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டும் இல்லாமல், அவர்கள் அப்பகுதியில் மக்களுடன் மக்களாக இருப்பதால் தன்னிச்சையாகவும் தன்முனைப்புடனும் கலந்து கொண்டனர்” எனக் கூறியுள்ளார்.
அதாவது, தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் சொல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களாகவே தன்னிச்சையாகக் கலந்து கொண்டனர் எனச் சீமான் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அருணா ஜெகதீசன் அறிக்கையில் இருப்பதைத்தான் மருதையன் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் சீமான் கூறியதாக மருதையன் குறிப்பிட்டது உண்மைதான். போராட்டத்தில் கலந்து கொள்ளத் தனது கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தவில்லை. அவர்கள் தன்னிச்சையாகவே கலந்து கொண்டனர் எனச் சீமான் கூறியது ஆணையத்தின் அறிக்கையில் இருப்பதைக் காண முடிகிறது.
கூடுதல் தகவல் :
சீமானிடம் கேட்கப்பட்டது போல் அப்போதைய திமுக எம்எல்ஏவும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனிடம் ஆணையம் தரப்பில் கேள்வி எழுப்பிய போது, ” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெவ்வேறு போராட்டங்கள் வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்டன. அந்த போராட்டங்கள் எதுவும் அரசியல் கட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது அல்ல எனக் கூறியவர், எனினும் நான் போராடும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதாலும், அந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையிலும் எனது ஆதரவை அளித்தேன் ” எனக் கூறியதாக குறிப்பிட்டப்பட்டு உள்ளது.