அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடலை தழுவியது உண்மையே !

பரவிய செய்தி
“எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவியது தான்” என ஒரு பொய்யை பெயர் குறிப்பிடாதத் தலைவர் (சீமான்) ஒருவர் கூறினார் – ஊடகவியலாளர் விஷன்
மதிப்பீடு
விளக்கம்
Kutty Documentary எனும் தமிழ் யூட்யுப் சேனலில் 2022 செப்டம்பர் 29ம் தேதி “Understanding Galatta Vishan” எனும் தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். ஊடகவியலாளர் விஷன் தனது வாழ்க்கை அனுபவம் குறித்தும், அரசியல் தலைவர்களுடனான உரையாடல்கள் குறித்தும் அதில் பேசியுள்ளார்.
வீடியோவின் 13.10வது நிமிடத்தில் தமிழகத்திலுள்ள ஒரு பெரிய கட்சியின் தலைவர் குறித்துப்(பெயர் குறிப்பிடாமல்) பேசியுள்ளார். “மைக் எடுத்தால் பொய் பேசுவது ஒன்று, வாழ்க்கையே பொய்யாக உள்ளது” என அந்தத் தலைவரை விமர்சித்துள்ளார்”. எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு என்னுடையது தான். நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளேன். என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவி தான் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு அமைக்கப்பெற்றது. வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதற்குக் கிரெடிட் தருகிறேன் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” என்று தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னிடம் அந்தத் தலைவர் பகிர்ந்துகொண்டதாக விஷன் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும், அந்தப் பெயர் குறிப்பிடாத தலைவர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எனப் பலர் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
இதுகுறித்து எள்ளு வய பூக்களையே பாடலின் பாடலாசிரியர் யுகபாரதி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது “சீமான் அவர்களும் வெற்றிமாறன் அவர்களும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பவர்கள் தான். இந்தப் பாடலை பொறுத்தவரை நாட்டுப்புற பாடலாக அவர் பாடிய மெட்டின் தழுவல் உண்டு. அவர் பாடியது பிடித்துப்போய் அதிலிருந்து தொடங்கியதே தான் இந்தப் பாடல். இதற்கு முழுமையாகப் பாடல் எழுதியது நான். இசையமைத்தது ஜி.வி. பிரகாஷ். ஆனால் இது ஒரு இன்ஸ்பிரேஷன்(Inspiraton) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், சீமான் அவர்களுக்கு நாட்டுப்புற பாட்டின் மீது ஒரு நீண்ட அனுபவமும் அறிவும் உண்டு. அவர் தம் இயக்கிய படங்களில் அவருடைய நாட்டுப்புற பாடலின் அறிவை பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் ஒரு கூடுதல் தகவல். சீமான் அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தால் அது உண்மையே” எனப் பதிலளித்தார்.
மேலும், 2019ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் கல்லூரி விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய சீமான் அவர்களின் வீடியோ நியூஸ்க்ளிட்ஸ் தமிழ்(Newsglitz Tamil) எனும் யூட்யூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் 2.48வது நிமிடத்தில் “பூ சிரிக்கப் பூ சிரிக்க” எனத் தொடங்கும் நாட்டுப்புற பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். அந்தப் பாடலும் எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டும் ஒரே மாதிரி இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.
இதிலிருந்து, எள்ளு வய பூக்களையே பாடல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியிருப்பது உண்மை என்றே தெரியவருகிறது.
முடிவு :
நம் தேடலில், எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு தான் பாடிய நாட்டுப்புற பாடலில் இருந்து தழுவியது எனச் சீமான் கூறியிருப்பது உண்மை எனத் தெரிய வருகிறது.