யூடியூபில் 3 லட்சம் பேர் சீமான் காணொளியை தேடுவதா கூகுள் அறிவித்ததா ?

பரவிய செய்தி
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ! யூடூப் பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் தேடப்படும் காணொளி செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளி பேச்சுக்கள் உலகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடைய பேச்சுக்களை யூடியூப் தளத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் தேடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்து இருப்பதாக மீம் பதிவு ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
இத்தகவல் குறித்து முகநூலில் தேடிய பொழுது, கடந்த ஓராண்டிற்கு முன்பே சீமானின் மேடை பேச்சுக்களை டிக்டாக் செய்தவர்களின் வீடியோக்களை தொகுத்து வழங்கி இருக்கும் வீடியோ பதிவின் கீழே சீமான் பேச்சை நாளொன்று 3 லட்சம் பேர் யூடியூப் பக்கத்தில் தேடுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆக, சில ஆண்டுகளாகவே இந்த தகவல் சுற்றி வருகிறது.
சீமான் காணொளியை நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் தேடுவதாக செய்திகளிலோ அல்லது இணையதள பக்கங்களிலோ எங்கும் வெளியாகியதாக தகவல்கள் இல்லை. மேலும், கூகுள் அறிவித்ததாக கூறுபவர்கள் எப்பொழுது அறிவித்தது எனத் தகவல்கள் அளிக்கவில்லை. ஆகையால், Google Trends தளத்தில் சென்று யூடியூப் தளத்தில் சீமான் அவர்களின் பேச்சுக்களின் பிரபலங்கள் குறித்து தேடிப் பார்த்தோம்.
உலகளவில் குறிப்பிடப்பட்ட வரைபடத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காணொளிகள் மிக பிரபலமாகி இருந்துள்ளன என்பதை மதிப்பு 100 அருகே இருப்பது குறிக்கிறது. மீதமுள்ள நாட்களில் மதிப்பு 50 என பாதியளவு பிரபலத்தைக் குறிப்பதாக காண்பிக்கிறது.
இதேபோல், 2019-ம் ஆண்டிற்கான வரைபடத்தில் தேர்தல் தருணமான ஏப்ரல் மாதத்தில் சீமான் குறித்த யூடிட்யூப் தேடல் உச்சத்தில் இருந்துள்ளது. ஆனால், மற்ற நாட்களில் குறைவாக இருக்கிறது.
Google Trends தளத்தில் சென்று நாள் மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சீமான் காணொளிகள் பிரபலம் குறித்த வரைபடத்தை நீங்கள் காணலாம். எனினும், வீடியோவின் தேடல்கள் லட்சங்களில் குறிப்பிடப்படவில்லை. மேலும், கடந்த ஓராண்டிற்கு மேலாகவே இந்த தகவல் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
இத்தகவலை உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பகிர்ந்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் எங்கு இப்படியொரு தகவலை அறிவித்தது எனத் தெரியவில்லை. சீமான் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தாலும் ஆதாரமில்லாத பதிவுகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.