செங்கோல் ஒப்படைத்த பிறகு விபத்து, மரணங்கள் நிகழ்வது பேரழிவைக் குறிக்கிறது என ஆதீனம் கூறினாரா ?

பரவிய செய்தி
இது பேரழிவிற்கான நிமித்தம் ஆகும். ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள் விபத்தின் காரணமாக துர்மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல. இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என கடவுள் கொடுக்கும் நிமித்த சேதியாகக் கூட இருக்கலாம். – திருவாடுதுறை ஆதீனம்Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஜூன் 02 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கிட்டத்தட்ட 803 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இத்தகைய சம்பவம் ஒரு பேரழிவிற்கான நிமித்தம் ஆகும். ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள் விபத்தின் காரணமாக துர்மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல என திருவாடுதுறை ஆதீனம் கூறியதாக ஜெயாப்ளஸ் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
இப்ப கதறி என்னய்யா பிரயோஜனம்.. pic.twitter.com/sVlaKpUOso
— சாணக்கியன்♦S.A (@thechanakkiyan) June 5, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்தி குறித்து ஜெயா ப்ளஸ் செய்தியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடியதில், இது குறித்து அவர்கள் கடந்த ஜூன் 04 அன்று எந்த நியூஸ்கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து திருவாவடுதுறை ஆதினம் ஏதாவது செய்தி வெளியிட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து பார்க்கையில், டெல்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய கடந்த ஜூன் 01 அன்று அவர் செய்தியாளர்களை இறுதியாக சந்தித்துள்ளார் என்பதையும், அதற்கு பின்பு அவர் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
ஜெயா ப்ளஸ் செய்தியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடியதில், திருவாவடுதுறை ஆதினம் குறித்து இறுதியாக கடந்த மே 26 அன்று நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதை காண முடிந்தது. அதில் “செங்கோல் கடவுள் வடிவில் தண்டிக்கும்” என்ற தலைப்பில் “75 ஆண்டுகளாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று அவர் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.
நீதி உடன் நடக்கவில்லை என்றால் செங்கோல் நிச்சயம் கடவுள் வடிவில் தண்டிக்கும்.
– திருவாடுதுறை ஆதீனம்#JayaPlus #NewParliamentBuilding #PMModi #BJP #Sengol #SengolAtNewParliament pic.twitter.com/Vx0YxrAGFv
— Jaya Plus (@jayapluschannel) May 26, 2023
இதன் மூலம் கடந்த மே 26 அன்று ஜெயாப்ளஸ் ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து ஜூன் 04 அன்று வெளியிட்டதாகக் கூறி போலியாக பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க : பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதானியிடம் ஒப்படைக்கப் போவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
மேலும் படிக்க : ஒடிசா இரயில் விபத்து களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என பழைய புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !
முடிவு:
நம் தேடலில், செங்கோல் ஒப்படைக்கப்பட்ட சில நாட்களுக்குள் துர்மரணம், இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கான அறிகுறி என திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக பரவி வரும் ஜெயா ப்ளஸ் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.