செங்கோலுக்கு பதிலாக திப்பு சுல்தான் வாளை வைக்க வேண்டும் என சுகி சிவம் கூறியதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
புதிய நாடாளுமன்றத்தில் நந்தி வடிவில் செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது. – ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம்
மதிப்பீடு
விளக்கம்
1947 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்தின் போது ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை, ஒன்றிய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பதாக முடிவு செய்தது.
அதன்படி 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றாக நேற்று (மே 28) திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், ஆதீனங்கள் சார்பில் செங்கோலானது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆன்மிக சொற்பொழிவாளரான சுகி சுவம், புதிய நாடாளுமன்றத்தில் நந்தி வடிவில் செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று கூறியதாக U2 BRUTUS யூடியூப் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இவன் வாயில் எதை வைப்பது சிறப்பானது… pic.twitter.com/1qAPvBeLzs
— UmaGargi (@Umagarghi26) May 27, 2023
சுகி சிவம் அய்யா அவர்கள் திப்புவின் வாளை வைப்பதின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை அமுக்கிவிடலாம் என்று மறைபொருளாக எண்ணுகிறாரோ என்னவோ https://t.co/FgWo8BcYa0
— RG SAMYUKTHA (@aargeeyes) May 27, 2023
உண்மை என்ன ?
இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சுகி சிவம் “ஒரு உயிரற்ற பொருளை டெல்லியில் உயர்த்திப் பிடிப்பதால் தமிழும் வளராது தமிழர் வாழ்வும் மேம்படாது” என்று கூறியதாக மற்றொரு நியூஸ் கார்டும் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.
ஒரு உயிரற்ற பொருளை
டெல்லியில் உயர்த்திப் பிடிப்பதால் தமிழும் வளராது
தமிழர் வாழ்வும் மேம்படாது.
-சுகி.சிவம் pic.twitter.com/RzaKp8iLcW— Sri Segar (@sri_segar) May 29, 2023
ஆகையால், சுகி சிவம் அவர்களின் அதிகாரப்பூர்வமான யூடியூப் பக்கமான Suki Sivam Expressions என்னும் பக்கத்தில் தேடியதில், இறுதியாக கடந்த மே 27 அன்று ‘குடியைக் கெடுக்கும் குடி’ என்னும் தலைப்பில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதில் குடியை குறித்து பேசுவதற்கு முன்பு, பரவி வரும் நியூஸ் கார்டுக்கு எதிராக அவர் தனது கண்டங்களை தெரிவித்திருப்பதை காண முடிந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான Suki Sivam சுகிசிவம் – The Great Philosopher எனும் பக்கத்தில் தனது கண்டனப் பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் “புதிய பாராளுமன்றத்தில் அமைந்துள்ள செங்கோல் பற்றி நான் கூறியதாக ஒரு பொய்யான தகவலை என் படத்துடன் சில சமூக விரோதிகள் வெளியிட்டுள்ளனர். என் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் உள்நோக்குடன் செய்தி பரப்புகிறவர்கள் மீது என் பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும், வைரல் செய்யப்படும் கார்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள U2 BRUTUS யூடியூப் சேனலும், நாங்கள் இந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்று கூறியுள்ளது. இதன் மூலம் பரவி வரும் இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என சுகி சிவம் கூறினாரா ?
இதற்கு முன்பும் பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகி சிவம் கூறியதாக பரவி வந்த செய்திகள் குறித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், ‘புதிய நாடாளுமன்றத்தில் திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பு’ என்றும், ‘ஒரு உயிரற்ற பொருளை டெல்லியில் உயர்த்திப் பிடிப்பதால் தமிழும் வளராது தமிழர் வாழ்வும் மேம்படாது’ என்றும் சுகி சிவம் கூறியதாகப் பரவி வரும் இரண்டு கார்டுகளும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.