ஷாஹீன் பாக் போராட்டத்தில் புர்கா அணிந்து வந்த வலதுசாரி பெண் !

பரவிய செய்தி
டெல்லி ஷாஹீன் பாக் பெண்கள் போராட்டத்தில் புர்கா அணிந்த பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுகிறாள். உடனே அருகில் இருந்த பெண்கள் அவளை பிடித்து விசாரிக்க, அவள் ட்விட்டர் பிரபலமான குன்சா கபூர். பிரதமர் மோடியே ட்விட்டரில் இந்த பெண்ணை பின்பற்றுகிறார். கையும் களவுமாக மாட்டிய இந்த பெண்சங்கியை டில்லி போலீஸ் பத்திரமாக அழைத்து சென்றது.
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் புர்கா அணிந்த பெண் ஒருவர் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு, பின்னர் டெல்லி காவல் துறையைச் சேர்ந்தவர்களால் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
மேலும், அப்பெண் போராட்டக்களத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பியதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. ஆகையால், நடந்த நிகழ்வு குறித்தும், அப்பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பியது உண்மையா என ஆராய்ந்து பார்த்தோம்.
முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா உடையை அணிந்து கொண்டு ஷாஹீன் பாக் போராட்டக்களத்தை சுற்றி வந்து கொண்டே இருந்த அப்பெண், அங்கிருந்தவர்களிடம் தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் மீது சந்தேகம் எழ போராட்டத்தில் இருந்த பெண்கள் பலரும் அப்பெண்ணை பிடித்து விசாரித்து உள்ளனர். அப்பெண் கேமராவை மறைத்து வைத்து இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளனர்.
போராட்டக்களத்திற்கு புர்கா அணிந்து வந்து பதற்றத்தை ஏற்படுத்திய பெண்ணின் பெயர் குன்ஜா கபூர். அந்நேரத்தில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த டெல்லி போலீசார் போராட்டக்காரர்களிடம் இருந்து குன்ஜா கபூரை அழைத்து செல்லும் காட்சியை ஏஎன்ஐ நியூஸ் ஏஜென்சி வெளியிட்டு உள்ளது.
#WATCH Political analyst Gunja Kapoor extricated by police after protestors at Delhi’s Shaheen Bagh alleged that she was wearing a ‘burqa’ and filming them. #Delhi pic.twitter.com/llRiKhMvOd
— ANI (@ANI) February 5, 2020
யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் குன்ஜா கபூர் தன்னுடைய வீடியோக்களில் வலதுசாரி கருத்துக்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ” Right Narrative ” என்ற யூடியூப் சேனலின் பொறுப்பாளர் என தன்னை குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் ட்விட்டர் பக்கத்தை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகிறார்கள். அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்து இருக்கிறார் குன்ஜா கபூர்.
I couldn’t have asked for a happier New Year gift!
Thanks a ton PM @narendramodi ji for this acknowledgement. We are your foot soldiers in building India as the Vishwa Guru.
Really means a lot 🙏🙏 pic.twitter.com/11LNr9OeWz
— Gunja Kapoor (@gunjakapoor) January 1, 2020
போராட்டக்காரர்களிடம் இருந்து குன்ஜா அழைத்து செல்லும் பொழுது அவர் ஏன் கேமராவை எடுத்துச் செல்கிறார் என நிரூபர்கள் கேட்டதற்கு, ” இது ஊடகங்களின் பரபரப்பான தருணம் அல்ல, செல்லுங்கள் ! ” என குன்ஜா தெரிவித்ததாக NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.
டெல்லி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டது விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் குன்ஜா கபூர் தன் ட்விட்டர் பக்கத்தில், தாம் பாதுகாப்பாக உள்ளதாகவும், டெல்லி போலீசிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ட்வீட் செய்து இருக்கிறார். அதற்கு தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா ஆதரவாக ட்வீட் செய்து இருக்கிறார்.
பாகிஸ்தான் கோஷம் :
குன்ஜா கபூர் புர்கா உடையில் போராட்டக்களத்திற்கு சென்று பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பியதாகவும் முகநூலில் பரவி வருகிறது. ஆனால், முதன்மை செய்திகளில் அவ்வாறாக வெளியாகவில்லை. அவர் போராட்டம் நடக்கும் இடத்தில் கேமராவுடன் சென்று தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்ததாகவே கூறப்படுகிறது. அவர் பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பியதாக ஆதாரங்கள் இல்லை.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் புர்கா அணிந்து வந்த வலதுசாரி ஆதரவு பெண் பிடிபட்டது உண்மையே. ஆனால், பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பியதாக கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.