சாஹின் பாக் பாட்டி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா ?

பரவிய செய்தி
கம்யூனிஸ்டுகளின் தேச துரோக போராட்டம். சாஹின் பாக் பாட்டி இப்போ பஞ்சாப் விவசாயி !
மதிப்பீடு
விளக்கம்
நவம்பர் 28-ம் தேதியில் இருந்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நாடு தழுவிய கவனத்தை பெற்று வருகையில், விவசாயிகள் போராட்டத்தை வைத்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அரசியல் சார்ந்தும் பல வதந்திகளை திணிக்க முயற்சிக்கின்றனர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ” சாஹின் பாக் ” போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான பாட்டி பஞ்சாப் விவசாயி போராட்டத்திலும் கலந்து கொண்டதாகவும், போராட்டத்திற்காக தினசரி பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளார் என இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ” டைம் பத்திரிகையில் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்ற பெயரில் இடம்பெற்ற அதே பாட்டி தான்.. அவர் 100 ரூபாய்க்கு கிடைக்கிறார் ” என கிண்டலடித்து பாட்டியின் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், அந்த ட்வீட் பதிவை நீக்கி இருக்கிறார்.
உண்மை என்ன ?
முதல் புகைப்படத்தில் இருப்பவர் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து சென்று ” தாதி ஆப் சாஹின் பாக் ” என அழைக்கப்பட்ட பில்கிஸ் பானு. செப்டம்பரில் டைம் பத்திரிகை வெளியிட்ட 2020-ன் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் 82 வயதான பில்கிஸ் பானு இடம்பெற்று இருந்தார்.
வயதான பாட்டி கையில் கொடியுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளும் இரண்டாவதாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அக்டோபர் 12-ம் தேதி Sikh Relief – SOPW எனும் முகநூல் பக்கத்தில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட்டு பாட்டியின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
தி ட்ரிப்யூன் செய்தியின் படி, அக்டோபர் 27-ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்று உள்ளது. வைரல் படத்தில் இருப்பது போன்று பெண்கள் மஞ்சள் நிற துணியை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அக்டோபர் 9-ம் தேதி பென்ரா கிராமத்தின் அருகே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது இறந்த விவசாயின் உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசாங்க வேலை வழங்குமாறு பாரதிய கிசான் யூனியன் பதாகையின் கீழ் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட சாஹின் பாக் பாட்டி என அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், சாஹின் பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட பாட்டியும், பஞ்சாப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாட்டியும் ஒரே ஆள் இல்லை.
மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதியா ?
” நான் சாஹின் பாக்கில் என் வீட்டில் உள்ளேன். வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல. தற்போது வரை நான் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நாளைக்கு போராட்டத்தில் நான் இணைந்து கொள்வேன் ” என பில்கிஸ் பானு பூம்லைவ் இணையதளத்திற்கு வீடியோ மூலம் பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களா ?
முடிவு :
நம் தேடலில், சாஹின் பாக் பாட்டி இப்போ பஞ்சாப் விவசாயி என வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது இரண்டும் வெல்வேறு பாட்டிகள். சாஹின் பாக் பாட்டி பில்கிஸ் பானு விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக வதந்தியை பரப்பி உள்ளனர் என அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரவுவது பற்றி அறிந்த பிறகு விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என சாஹின் பாக் பாட்டி பில்கிஸ் பானு தெரிவித்து இருந்தார். அதேபோல், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி-ஹரியானா எல்லைக்கு சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.