This article is from Dec 22, 2017

Shin chan கார்ட்டூன் தொடர் உண்மையான கதையா ?

பரவிய செய்தி

நாம் அனைவரும் விரும்பி பார்த்து வரும் “ ஷின் சான் ” கார்ட்டூன் தொடரில் வரும் ஷின் சான் என்ற குழந்தையின் கதாபாத்திரம் உண்மையான சம்பவம் ஆகும். ஐந்து வயதான ஷின் சான், தனது தங்கையான ஹிமாவாரியை மோத வந்த காரில் இருந்து காப்பாற்றும் போது விபத்தில் சிக்கி இறந்தான் என்பதை பலரும் அறிய வாய்ப்பில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

கார்ட்டூன் தொடரான ” ஷின் சான் ” குழந்தையின் கதாபாத்திரம் கற்பனை கதை என்று அதை உருவாக்கியவரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இதையறியாமல், ஷின் சான் இறந்து விட்டதாகக் கூறி வலைதளங்களில் தவறான செய்திகளை வைரலாக்கி உள்ளனர்.

விளக்கம்

“ Crayon shin Chan ” என்ற ஜப்பானை சேர்ந்த கார்டூன் தொடருக்கு குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மொழியில் மாற்றப்பட்ட ஷின் சான் கார்டூன் தொடர், கடந்த சில மாதங்களாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஷின் சான் தொடரைப் பார்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

      அத்தொடரின் சிறப்பு அம்சமே ” ஷின் சான் ” என்ற குழந்தை செய்யும் குறும்புகள் தான். தன்னை சுற்றி உள்ளவர்களை கிண்டல், கேளிகள் செய்வதோடு சில சமயம் கோபமடையக் கூடச் செய்வான் அச்சிறுவன். தமிழில் டப் செய்த விதம் கணக்கச்சிதமாக பொருந்திருக்கும். குறிப்பாக அவன் பேசும் “ அமைதி அமைதி அமைதியோ அமைதி “ என்ற சிறந்த வசனம் பலரையும் கவர்ந்த ஒன்றாகும்.

இவ்வாறு இருக்கையில், ஷின் சான் குழந்தையின் கதாபாத்திரம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றும், 5 வயதான ஷின் சான் தனது தங்கை ஹிமாவாரியை காரில் இருந்து காப்பாற்றும் போது விபத்தில் சிக்கி இறந்ததாக செய்திகள் வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், அத்தொடரின் இறுதி எபிசொட் ஆனது ஷின் சான் இறந்து போவதாக அமைத்திருக்கும். எனவே, அக்காட்சியை நிறுவனம் நீக்கியதாக கூறி வருகின்றனர். இது பலரின் மனதை வேதனை அடையச் செய்தது.

ஆனால், இச்செய்திகள் அனைத்தும் தவறானவை ஆகும். ஷின் சான் கார்டூன் கதாபாத்திரம் கற்பனை என்று அத்தொடரை உருவாக்கிய “ யோஷியோ உசூய் ” தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். கற்பனையான கதாபத்திரத்தை இறந்ததாகக் கூறி வதந்தியை பரப்பியுள்ளனர்.

ஆக, ஷின் சான் பற்றிய தவறான செய்திக்கு ஷின் சான் வடிவிலே கூற வேண்டும் என்றால், வதந்தி! வதந்தி! வதந்தியோ வதந்தி, வதந்திகேல்லாம் வதந்தி.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader