ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை ஹஜ் யாத்திரைக்கு 35 கோடி நன்கொடை அளித்ததாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் .. முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக 35 கோடி நன்கொடை. ஒரு வேளை பூஜைக்கே வழியில்லாத ஏழை இந்துக்கோவில்களுக்கு கூட இப்படி கொடுக்கவில்லையே …ஏன்? இப்போதாவது சிந்தியுங்கள் … சாய்பாபா என்பது இந்துக்களை ஏமாற்ற நடத்தப்படும் ஆன்மீக ஜிஹாத்..
மதிப்பீடு
விளக்கம்
ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை, ஹஜ் யாத்திரைக்கு 35 கோடி நன்கொடை வழங்கியுள்ளது என்றுக் கூறி ஸ்கிரீன் ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த ஸ்கிரீன் ஷாட்டில் , “ஷிர்டி அறக்கட்டளை ஹஜ் பயணத்திற்கு எந்த தொகையையாவது நன்கொடையாக வழங்கியுள்ளதா” என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடப்பட்டுள்ளது.
பின்பு அந்த கூகுள் முடிவின் ஸ்கீரின் ஷாட்டோடு, “ஷீரடி சாய்பாபா டிரஸ்ட், முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக 35 கோடி நன்கொடை, ஒரு வேளை பூஜைக்கே வழியில்லாத ஏழை இந்துக்கோவில்களுக்கு கூட இப்படி கொடுக்கவில்லையே ஏன்? இப்போதாவது சிந்தியுங்கள் சாய்பாபா என்பது இந்துக்களை ஏமாற்ற நடத்தப்படும் ஆன்மீக ஜிஹாத்” என்று குறிப்பிட்டு வைரலாகி வருவதையும் காண முடிந்தது.
மேலும் இவை முகநூலில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள ட்விட்டர் ஐடி குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், அந்த ஐடி kavita_tewari என்பவருடையது என்பதை அறிய முடிந்தது.
மேலும் அந்த ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
எனவே ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை (Shri Saibaba Sansthan Trust Shirdi) இந்த நன்கொடை குறித்து ஏதாவது செய்தி வெளியிட்டிருக்கிறார்களா என்பது குறித்து அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடினோம். இது குறித்து எந்த செய்திகளும் வெளியிடவில்லை.
மேலும் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை, MRI, CAT ஸ்கேன், DSA இயந்திரங்கள் மற்றும் MCI அங்கீகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பிற உபகரணங்களை வாங்குவதற்காக IGMCH க்கு 2018 இல் 35.28 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதே போன்று ஷீரடி அறக்கட்டளையின் நன்கொடையிலிருந்து 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிர மாநில அரசுக்கு 51 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதை தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. இது தவிர ஹஜ் பயணத்திற்கு 35 கோடி நன்கொடை வழங்கியது தொடர்பாக எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்க்க, ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் நிர்வாக கணக்கு அதிகாரியான சச்சின் என்பவரிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அத்தகைய நன்கொடை எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டு மசூதியின் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் பங்களாதேஷ் வீடியோ !
மேலும் படிக்க: கேரளாவில் உள்ள சர்ச்சில் ரூ7000 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் தவறான தகவல் !
முடிவு:
நம் தேடலில், ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை ஹஜ் யாத்திரைக்கு 35 கோடி நன்கொடை வழங்கியுள்ளது என்று கூறி பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், இத்தகைய நன்கொடைகள் எதுவும் அவர்கள் வழங்கவில்லை என்பதையும் அறிய முடிகிறது.