புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிட்கோ தொழில்மண்டலமா ?

பரவிய செய்தி

குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் சென்னை மக்கள் திண்டாடும் நேரத்தில் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சிட்கோ தொழில் மண்டலம். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு.

மதிப்பீடு

விளக்கம்

கோடைக்காலங்களில் சென்னையின் தண்ணீர் நெருக்கடி எதிர்பாராத அளவிற்கு உயருகிறது. சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான முக்கிய ஏரிகளிலும் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறினர்.

Advertisement

இந்நிலையில், சென்னைக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிட்கோ எனும் தொழில் மண்டலம் அமைக்கப்பட போவதாக செய்தித்தாளில் வெளியானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தினகரன் செய்தித்தாளில் வெளியான செய்தி குறித்து தேடினோம் ஆகஸ்ட் 11-ம் தேதி தினகரன் இணையத்தளத்திலும் புழல் ஏரி சிட்கோ மண்டலம் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.

சிட்கோ தொழில் மண்டலம் :

இந்த செய்திக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ” சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் ” என தெரிவித்து இருக்கிறார்

சிறு தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வரும் சிட்கோ ஆனது பெண் தொழில் முனைவோருக்கான தனி தொழில் மண்டலம் ஒன்றை புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. அதற்காக 53 ஏக்கர் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தொழில் செய்ய ஏற்ற இடமாக மாற்றித் தர வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்து உள்ளது.

Advertisement

” சிட்கோ மண்டலம் அமைக்க முடிவு எடுப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை ” என அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகர் தெரிவித்து இருக்கிறார்.

புழல் ஏரியை சுற்றி பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்து உள்ளன. அந்த பகுதிகளில் பெய்யும் மழையால் சிறு சிறு ஓடைகள் உருவாகி புழல் ஏரியை வந்தடைகிறது. அவ்வாறு வரும் மழை நீருக்கு தடைகள் ஏற்படாமல் நீர்ப்பிடிப்பு பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

ஒருவேளை, ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிட்கோ தொழில் மண்டலம் அமைக்கப்பட்டால் ஏரிக்கு வரும் மழை நீர் தடைப்படும். அப்பகுதியில் பெய்யும் மழையால் நீரானது ஓடுவதற்கு இடமின்றி தேங்கக்கூடும். இதனால் நீர் சேமிப்பு குறைந்து மக்களுக்கு பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

ஆகஸ்ட் 11-ம் தேதி தினகரன் செய்தியில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும் வெளியாகி உள்ளது. ஆனால், ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியான செய்தியில் சிட்கோ திட்டத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என செய்தி வெளியாகி உள்ளது.

4,500 ஏக்கர் பரந்து விரிந்து உள்ள புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ விண்ணப்பித்து இருப்பது உண்மையே. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொழில் மண்டலம் அமைந்தால் எதிர்காலமின்றி நிகழ் காலத்திலேயே தண்ணீர் பிரச்சனைகள் உருவாக வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button