முஸ்லீம் நபர் சீக்கிய விவசாயியாக வேடமிட்டதாகப் பரப்பப்படும் ஃபோட்டோஷாப் வதந்தி!

பரவிய செய்தி
விவசாயிகள் போராட்டத்தில் மீசை இல்லாத “சிங்”. எங்காவது முறுக்கிய மீசை இல்லாத “சிங்” கை பார்த்திருக்கிங்களா ?
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் முதன்மையாக கலந்து கொண்டது பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் விவசாயிகளே. ஆகையால், விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. பின்னர், புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற மாநிலங்களிலும் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தலைப்பாகை மற்றும் தாடியுடன் மீசை இல்லாத ஒருவரின் புகைப்படத்தை வைத்து டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லீம்கள் சீக்கிய விவசாயிகள் போல் நடிப்பதாக மீம்ஸ் பரப்பப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இந்திய அளவிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரலாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குவிற்கு அருகே உள்ள புராரியின் நிரான்கரி மைதானத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பேட்டி எடுத்த லைவ் வீடியோ Hindustan LIVE Farhan Yahiya எனும் முகநூல் பக்கத்தில் நவம்பர் 29-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
போராட்ட களத்தில் எடுக்கப்பட்ட லைவ் வீடியோவில் சீக்கியர்கள் உள்ளிட்ட பலரும் பேசும் போது 7.28வது நிமிடத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் நபரையும், அவருக்கு மீசை இருப்பதையும் காணலாம்.
போராட்டத்தில் கலந்து கொண்டவரின் முகத்தில் இருந்து மீசையை ஃபோட்டோஷாப் மூலம் நீக்கி விட்டு மீசை இல்லாத சிங், முஸ்லீம்கள் சீக்கிய விவசாயிகள் போன்று வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் மட்டுமின்றி முஸ்லீம்கள் என பிற மதத்தினரும் பங்கேற்று உள்ளனர். மேற்காணும் லைவ் வீடியோவில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்திலும் முஸ்லீம்களைக் குறி வைத்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதை கட்டுரைகளாக நாம் வெளியிட்டு உள்ளோம்.
மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதியா ?