பொருளாதார வீழ்ச்சியிலும் பிரதமர் மீது நம்பிக்கை வைத்த இந்தியர்களை வணங்குகிறேன் என ராஜபக்சே கூறினாரா ?

பரவிய செய்தி
வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியிலும் தேசத்தின் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்கும் இந்தியர்களை வணங்குகிறேன். இலங்கையில் நடைபெறும் போராட்டங்களின் காரணமாக பதவி விலகிய பிரதமர் மகிந்த ராஜபக்சே உருக்கம்.
மதிப்பீடு
விளக்கம்
இலங்கையில் நடைபெற்று வரும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் தொடர் போராட்டங்களால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு,” பொருளாதார வீழ்ச்சியிலும் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்கும் இந்தியர்களை வணங்குகிறேன் ” எனக் கூறியதாக பாலிமர் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
இலங்கையில் தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காணாத ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உட்பட ராஜபக்சே குடும்பத்தினரே பதவியில் இருந்து விலக வேண்டும் என ஏப்ரல் 9-ம் தேதி முதல் வீதிகளில் இறங்கி போராடி வந்தனர்.
கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிரான போராடி வரும் போராட்டக் குழுவினருக்கு எதிராக மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் திரண்டு மோதல்கள் உருவாகியது. இந்த மோதல்களில் பலர் படுகாயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், மே 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அதேநாள், மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படியொரு சூழ்நிலையில், மகிந்த ராஜபக்சே இந்தியாவில் நிலை குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை. எனவே பரப்பப்படும் செய்தி குறித்து, பாலிமர் செய்தியின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், மே 9-ம் தேதி அப்படியொரு செய்தியே வெளியாகவில்லை.
“மே 9-ம் தேதி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே. காலிமுகத்திடலில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார் ” என்ற செய்தியே வெளியாகி இருக்கிறது. அதில், போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர் .
மேலும் படிக்க : இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்கு உயர்வு என கோத்தபய ராஜபக்சே கூறினாரா ?
இதற்கு முன்பாகவும், இதேபோன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியாவைப் பற்றி பேசியதாக போலியான நியூஸ் கார்டு பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியிலும் தேசத்தின் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்கும் இந்தியர்களை வணங்குகிறேன் என மகிந்த ராஜபக்சே கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.