விமானத்தில் தமிழ் அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு.. விமானியின் நீண்டநாள் ஆசை !

பரவிய செய்தி
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
சென்னையில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டதற்கு பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்கூட் (Scoot) விமான நிறுவனம் தகவல் தெரிவித்தது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிங்கப்பூர் விமான நிறுவனம் ஸ்கூட்டில் விமானியாக பணிபுரிந்து வருபவர் சரவணன் அய்யாவு . இவருக்கு நீண்ட நாட்களாக பயணிகளுக்கு தமிழ் மொழியில் அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணமும் , ஆசையும் இருந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் பயணிகளுக்கான அறிவிப்பை விமானி சரவணன் அய்யாவு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கி உள்ளார்.
அதில் , ” தற்போது நாம் 41 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூரில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் நடக்க போகிறது. சிங்கப்பூர் நேரப்படி மணி 7.40-க்கு தரையிறங்குவோம். சிங்கப்பூர் வானிலை மேகமூட்டமாக இருக்கும், வானிலை 26 டிகிரி செல்சியஸ் ” என அறிவிப்பை வழங்கி இருந்தார். பின்னர் அதையே ஆங்கிலத்தில் வழங்கி உள்ளார்.
One mini ambition of mine. To make an inflight announcement in Tamil in addition to the one in English. Made it today on my Chennai flight.
A huge thank you to the Captain who gave me the permission, and to the cabin crew who helped me record it.
And thank you dear Universe! pic.twitter.com/FSXBqE5zlA
— Saravanan Ayyavoo (@Ayyavoo) December 21, 2019
தமிழில் வழங்கிய அறிவிப்பின் வீடியோவை டிசம்பர் 20-ம் தேதி விமானி சரவணன் அய்யாவு தன்னுடைய முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழில் அறிவிப்பு வழங்குவது தன்னுடைய சிறிய லட்சியம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், தன்னுடைய விருப்பத்திற்கு அனுமதி அளித்த கேப்டனுக்கு நன்றியையும் தெரிவித்து இருக்கிறார். அவரின் பதிவு ஆயிரக்கணக்கில் லைக் மற்றும் ஷேர் ஆகி இருக்கிறது. தன்னுடைய தமிழ் அறிவிப்பிற்கு மக்களிடம் வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தற்கு மற்றொரு ட்வீடில் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.
” விமானி சரவணன் அய்யாவுக்கு தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஸ்கூட் நிறுவனம் விளக்கம் சிங்கப்பூர் செய்தி நிறுவனத்தின் தமிழ் பிரிவிற்கு தகவல் அளித்து உள்ளது “.