சீன மேலாளரை வந்தேறி என்றதால் நா.த.கட்சி உறுப்பினருக்கு சிங்கப்பூர் அரசு தடையா ?

பரவிய செய்தி
சீன மேலாளரை வந்தேறி என்று கூறி தாக்கிய விவகாரத்தில் திருவாரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் குமார் என்பவரை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது. மீண்டும் சிங்கப்பூரில் நுழைய வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த குமார் என்பவர் சீன மேலாளரை வந்தேறி எனக் கூறி தாக்கியதால் சிங்கப்பூர் அரசு அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும், சிங்கப்பூரில் நுழைய அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது என பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து பாலிமர் செய்தியின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், டிசம்பர் 19-ம் தேதி அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. பாலிமர் செய்தியில் வெளியாகும் நியூஸ் கார்டுகளில் எடிட் செய்து இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
இதுகுறித்து, பாலிமர் செய்தி சேனல் தரப்பைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், ” இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
டிசம்பர் 19-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியின் போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவரை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பி உள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பி கேள்விக்கு, ” அதற்காக வருந்துகிறேன், அது அவசியமற்றது. ஏற்கனவே 400-க்கும் மேற்பட்ட என் பிள்ளைகளை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அதற்காக, தூதரகத்தில் பலமுறை முறையிட்டு பார்த்தும், சரிவரவில்லை. சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான் யூ-வை எல்லாம் கொண்டாடி இருக்கிறோம். ஆனால், ஏன் திரும்ப திரும்ப இப்படி செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரை, பிரபாகரனை காரணம் காட்டுகிறார்கள். சிங்கப்பூரை பொறுத்தவரை முன்பு எங்கள் கட்சி வலிமையாக இருந்தது. ஆனால், இப்பொது எங்களது நடவடிக்கைகளை முழுமையாக முடக்கி விட்டார்கள் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், சீன மேலாளரை வந்தேறி என்று கூறி தாக்கியதால் திருவாரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் குமார் என்பவருக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை விதித்ததாக பரவும் செய்தி போலியானது. அந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது.