சிங்கப்பூர் அதிபரான தர்மன் சண்முகரத்னம் இந்திய வம்சாவளி எனத் தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி
சிங்கப்பூரின் 9-வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு.
மதிப்பீடு
விளக்கம்
சிங்கப்பூரின் புதிய அதிபராக 70.4% வாக்குகள் பெற்று முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், மக்களால் வாக்களிக்கப்பட்ட முதல் சீனர் அல்லாத அதிபர்.
சிங்கப்பூர் அதிபர் ஆகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம்..!#Singapore #DharmanShanmugaratnam #DinakaranNews pic.twitter.com/fqU7yrC0JW
— Dinakaran (@DinakaranNews) September 1, 2023
Hearty congratulations Thiru.@Tharman_s on your election as the President of Singapore.
சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்கும் திரு.தர்மன் ஐயா அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
சிங்கப்பூர் அரியணையில் இந்திய தமிழர் என்பது எங்களுக்கு பெருமை! pic.twitter.com/fNyjG3jLmA
— Dr.SG Suryah (@SuryahSG) September 2, 2023
இந்நிலையில், தமிழ் வம்சாவளி, இந்திய வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் எனச் செய்திகள் இந்திய அளவில் வெளியாகத் தொடங்கின. தினகரன், தினமலர், டைம்ஸ் நவ், சிஎன்பிசி டிவி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய ஊடகங்கள் தர்மன் சண்முகரத்னம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று செய்தி வெளியிட்டன.
உண்மை என்ன ?
தர்மன் சண்முகரத்னம் குறித்து தேடுகையில், அவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பிபிசி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது தந்தை கனகரத்னம் சண்முகரத்னம் சிங்கப்பூரில் பிரபல நோயியல் நிபுணர். அவர் சிங்கப்பூரில் “நோயியலின் தந்தை” என்றும் அழைக்கப்படுகிறார்.
2016ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கையின் டெய்லி நியூஸ் தளத்தில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பிரபலமான தமிழர்களின் பட்டியல் பற்றிய கட்டுரை ஒன்றில் தர்மன் சண்முகரத்னத்தின் தந்தை கனகரத்னம் சண்முகரத்னம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இவரின் தந்தை ஆசிரியர் என்றுள்ளது.
1957 பிப்ரவரி 25ம் தேதி தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரில் பிறந்தார். ஏசியன் சயின்டிஸ்ட் இணையத்தளத்தின் மற்றொரு கட்டுரையில் தர்மனின் தந்தை கனகரத்னம் 1921 ஏப்ரல் மாதம் அப்போதைய பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் இருந்த சிங்கப்பூரில் (Lanka Dispensary) பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மனின் தாய் சீன வம்சாவளி என cnbctv18 இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவரைப் பற்றி பெரிய அளவில் இணையத்தில் தகவல்கள் இல்லை. அதேபோல், தர்மனின் மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி, ஜப்பானிய வணிகர் தந்தைக்கும் சிங்கப்பூர் சீனத் தாய்க்கும் பிறந்தவர்.
சிங்கப்பூரின் Straits Times எனும் இணையதளத்தில் 2015 ஜூலை வெளியான கட்டுரை, இலங்கைத் தமிழ் உணவுகள் பற்றிய புதிய சமையல் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்த சமையல் புத்தகம் 2015ல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த சமையல் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் இலங்கைத் தமிழ் சமூகத்தில் உள்ள சமூக முயற்சிகளுக்கு நிதியளிக்கும் என்று கட்டுரை தெரிவிக்கிறது. இலங்கையின் பூர்வீகத்தைக் கொண்ட அப்போதைய துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் அவர்களால் சமையல் புத்தகத்தை அறிமுகப்படுத்தியதாக அதில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்திய ஊடகங்கள் தர்மன் சண்முகரத்னத்தை இந்திய வம்சாவளி எனக் குறிப்பிடுவது போன்று, இலங்கை ஊடகமான கொழும்பு கெசட் அவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு உள்ளது.
As Tharman Shanmugaratnam @Tharman_S, assumes the prestigious role of President of #Singapore, I wish him the very best 🇸🇬 His achievements and his Sri Lankan ancestry are indeed an inspiration @MFAsg @MFA_SriLanka pic.twitter.com/u5rgKJkhhD
— M U M Ali Sabry (@alisabrypc) September 2, 2023
தர்மன் சண்முகரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தன் X (ட்விட்டர்) பதிவில், “அவரது சாதனைகள் மற்றும் அவரது இலங்கை வம்சாவளி உண்மையில் ஒரு உத்வேகம்” என்று கூறியுள்ளார்.
மேலும், மற்ற ஊடகங்கள் போல் தர்மன் சண்முகரத்னம் இந்திய வம்சாவளி என வெளியிட்ட குயின்ட் இணையதளம், அவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் திருத்தி செய்தி வெளியிட்டு உள்ளது.
தர்மன் சண்முகரத்னம் மற்றும் அவர் தந்தை கனகரத்னம் பிறந்தது சிங்கப்பூரில்(பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் இருந்த பகுதி), ஆனால் கனகரத்னத்தின் தந்தையின் பூர்வீகம் இலங்கையைச் சேர்ந்த தமிழ் சமூகமாக இருந்துள்ளனர். தமிழர் என்பதால் இந்திய வம்சாவளி எனக் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்திய வம்சாவளி என்பதற்கு எந்த தகவலும் இல்லை.
முடிவு :
நம் தேடலில், சிங்கப்பூரின் புதிய அதிபரான தர்மன் சண்முகரத்னம் இந்திய வம்சாவளி அல்ல, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.