புதுச்சேரியில் பாடகர் கோவன் மது போதையில் தாக்கப்பட்டதாக வதந்தி !

பரவிய செய்தி
சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை !. புதுச்சேரியில் நண்பர்களுடன் மது அருந்தும் போது மதுபான கடை ஊழியர்கள் உடன் மோதல்.
மதிப்பீடு
விளக்கம்
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரும், பாடகருமான கோவன் ” மூடு டாஸ்மாக்கை மூடு ” எனும் பாடலின் மூலம் ஜெயலலிதா அரசை விமர்சித்ததால் கைதாகியவர்.
இப்படி கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை மூடு எனப் பாடி பிரபலமான பாடகர் கோவன், தற்போது புதுச்சேரியில் உள்ள மதுக்கடையில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதால், அவர் தாக்கப்பட்டதாக U2brutus பக்கத்தின் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது
உண்மை என்ன ?
புதுச்சேரியில் பாடகர் கோவன் மதுக்கடையில் தாக்கப்பட்டதாக செய்தி ஊடகங்களில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆகையால், வைரலாகும் கார்டு பற்றி U2brutus சேனல் நிர்வாகி மைனரிடம் பேசுகையில், இதை நாங்கள் வெளியிடவில்லை என மறுத்து இருந்தார்.
மேலும், இது போலியான கார்டு என U2brutus முகநூல் பக்கத்தில் மே 14-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச்செயலாளர், ” எமது தோழர்கள் மீதும் குறிப்பாக தோழர் கோவன் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர். குறிப்பாக தோழர் கோவன் மது அருந்தியதாகவும், அங்கே தகராறு ஏற்பட்டதாகவும் தவறாக சித்தரித்து சமுக ஊடகங்களில் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இது முழுக்க முழுக்க காவிகளாலும் அவர்களைச் சார்ந்தவர்களாலும் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் ” என புதிய கலாச்சாரம் செய்திகள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.