நடிகர் சிவக்குமார் மீண்டும் செல்போனை தட்டி விட்டதாகப் பரப்பப்படும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சிவக்குமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்ற போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞரின் செல்போனை தட்டி விட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியதால் செல்போனுடன் தொடர்படுத்தி அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை நடிகர் சிவக்குமார் மீண்டும் தட்டி விட்டு உள்ளதாக 10 நொடிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டி விட்ட காட்சி வைரலாகியதை அடுத்து விளக்கம் அளித்து இருந்தார். மேலும், பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் இளைஞருக்கு புது செல்போன் வழங்கப்பட்டதாக செய்திகளில் வெளியானது.
தற்போது மீண்டும் செல்போனை தட்டி விட்டதாக நியூஸ் ஜெ சேனலின் லோகோ உடன் வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடிய போது, ” அந்த வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூஸ் ஜெ சேனலில் வெளியாகி இருக்கிறது ” என அறிய முடிந்தது.
முதல் சம்பவம் நிகழ்ந்து வைரலாகி பிரச்சனை முடிவுக்கு வந்த சில மாதங்களிலேயே மீண்டும் நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்டு சென்றது நிகழ்ந்துள்ளது.
அந்த வீடியோ காட்சி செய்திகளில் வெளியாகி இருக்கிறது. 2019ம் ஆண்டிலேயே இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரவியும் இருந்துள்ளது. அதை தற்போது நடந்தது போல் மீண்டும் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், நடிகர் சிவக்குமார் மீண்டும் செல்போனை தட்டி விட்டு சென்றுள்ளதாக பரப்பப்படும் வீடியோ கடந்த 2019-ல் நிகழ்ந்த சம்பவம். பழைய வீடியோவை தற்போது மீண்டும் நிகழ்ந்தது போல் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.