இது சிவநாக மரத்தின் வேரா ? உண்மை என்ன ?

பரவிய செய்தி
இது *சிவ நாகம்* என்ற மரத்தின் வேர்.வேரை மரத்திலிருந்து வெட்டி எடுத்த 10 முதல்15 நாட்கள் உயிர்ப்புடன்..
மதிப்பீடு
விளக்கம்
சிவநாகம் என்கிற மரத்தின் வேரை வெட்டி எடுத்த பிறகு 10 முதல் 15 நாட்கள் உயிருடன் இருக்கும் மற்றும் அது பாம்பு போல நெளிந்து கொண்டே இருக்கும் அற்புத காட்சி எனக் கூறி 30 நொடிகள் கொண்ட வீடியோ முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழகத்தில் சிவலிங்க பூ மரம் குறித்து பலரும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், சிவநாக மரம் என யாரும் கேள்விப்பட்ட ஒன்றாக இல்லை. ஆன்மீகம், வேளாண் சார்ந்தவர்களிடம் சிவநாக மரம் என ஒன்று இருக்கிறதா எனக் கேட்டால் அப்படியொன்று இருப்பதாக கேள்விப்பட்டது இல்லை என பதில் அளித்தனர்.
வைரல் வீடியோவில் இருப்பது வேரினை போன்று இருந்தாலும் பார்ப்பதற்கு புழுவை போன்று நெளிவதை தெளிவாய் பார்க்க முடிகிறது. இதுகுறித்து தேடுகையில், இது ஒருவகையான புழு என அறிய நேர்ந்தது.
வீடியோவில் நெளிவது ஹார்ஸ்ஹேர் புழுக்கள்(Horsehair Worm) எனும் ஒருவகை புழுவாகும். வெட்டுக்கிளிகள், கிரிகெட்டுகள்(ஒருவகை பூச்சி), கரப்பான் பூச்சிகள் மற்றும் சில வண்டுகளின் உடல்களில் ஒட்டுண்ணிகளாக ஹார்ஸ்ஹேர் புழுக்கள் வாழ்கின்றன. முதிர்ச்சி அடையும் போது, அவை முட்டையிடுவதற்கு ஹோஸ்ட்டை விட்டு விடுகின்றன.
வைரல் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் காட்சியைப் போன்று கீழ்காணும் வீடியோவில் ஹார்ஸ்ஹேர் புழுக்கள் நெளிவதை தெளிவாய் காணலாம்.
கார்டியன் புழுக்கள் எனவும் அழைக்கப்படும் ஹார்ஸ்ஹேர் புழுக்கள் நெமடோமார்பா குழுவைச் சேர்ந்தவை. அவை நூற்புழுவைப் போலக் காட்சியளிக்கும். ஆனால், மிக நீளமானவை (4 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்டது) மற்றும் மெல்லியவை. வெட்டுக்கிளிகள், கிரிகெட்டுகள் போன்ற பூச்சிகளில் உடலில் ஒட்டுண்ணிகளாக வாழும் ஹார்ஸ்ஹேர் புழுவையும்(Horsehair Worm), வைரல் வீடியோவில் இருப்பதையும் ஒற்றுமைப்படுத்தி காண்பித்து உள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், சிவநாக மரத்தின் வேர் எனக் கூறி வைரல் செய்யப்படும் வீடியோவில் இருப்பது மரத்தின் வேர் அல்ல, ஹார்ஸ்ஹேர் புழுக்கள் எனும் ஒருவகையான ஒட்டுண்ணி புழுக்கள் என அறிய முடிந்தது.