பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் நடத்தும் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனையா ?

பரவிய செய்தி
ஸ்மிருதி இராணியின் மகள் கோவாவில் நடத்தும் உணவகத்தின் மெனு கார்டில் மாட்டுக்கறி உணவு !
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அமைச்சரான ஸ்மிருதி இராணியின் மகள் கோவாவில் நடத்தும் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக மெனு கார்டு ஒன்றின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் இசை என்பவரின் ட்விட்டர் பக்கத்திலும் இப்படமானது பதிவிடப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Double face of BJP#BJPFails pic.witter.com/0Jql0pTttU
— இசை (@isai_) July 26, 2022
மாட்டு நாக்கும், கன்னுகுட்டி நெஞ்செழும்பும் எக்ஸ்ட்ரா ஸ்பெசலாம் ஸ்மிருதி இராணி மகள் நடத்தும் ரெஸ்டாரன்டில். 😂😂😂😂
ஏன்டா நீங்க ரெஸ்டாரண்ட் நடத்தி மாட்டு நாக்கும் கன்னுகுட்டி கறியும் விப்பிங்க, அதையே நாங்க சாப்டா எங்கள போட்டு அடிப்பிங்க.! pic.twitter.com/nfajXFb9Mh
— Kallukoottam Karuppan (@KallukoottamAn1) July 25, 2022
உண்மை என்ன ?
கோவாவின் அசாகோவில் உள்ள சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் எனும் உணவம் ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் ஜோயிஷி இராணிக்கு சொந்தமானது என்றும், சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது கடும் சர்ச்சைப் புயலை உருவாக்கியது. சர்ச்சைக்கு நடுவே அந்த உணவகத்தின் பெயர் பலகையில் ” பார் ” என்பது மறைக்கப்பட்டு உள்ளதாக வீடியோ ஒன்றும் வைரலாகியது.
இதற்கிடையில், ஜோயிஷி இராணியின் சில்லி சோல்ஸ் கஃபே உணவகத்தில் மாட்டுக்கறி இறைச்சியில் செய்யப்பட்ட Beef Tongue எனும் உணவு வகை விற்பனை செய்யப்படுவதாக மெனு கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
வைரல் செய்யப்படும் மெனு கார்டு குறித்து தேடிய போது, அது கோவாவில் உள்ள அப்பர் டெக், ரேடிசன் ப்ளு ரேசார்ட் உடைய மெனு கார்டு என அறிய முடிந்தது. சோமாட்டோ மற்றும் ஈசி டின்னர் ஆகியவற்றின் இணையதளங்களில் இம்மெனு கார்டு இடம்பெற்று உள்ளது. இந்த உணவகம் சில்லி சோல்ஸ் கஃபே அமைந்துள்ள அசாகோவில் இருந்து 60கி.மீ தொலைவில் உள்ள கேவெலோசிமில் எனும் பகுதியில் அமைந்துள்ளது.
சோமாட்டோ மற்றும் ஈசி டின்னர் ஆகிய இணையதளங்களில் சமீபத்தில் உள்ள மெனுவின் படி, சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் உடைய மெனுவில் மாட்டிறைச்சி உணவு பற்றி எதுவும் இடம்பெறவில்லை.
சர்ச்சை :
கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் உரிமையாளர் இறந்தவரின் பெயரைப் பயன்படுத்தி உணவகத்தின் மதுபான உரிமத்தை புதுப்பிக்க முயற்சித்ததாக தெரியவந்த பிறகே சர்ச்சை உருவானது. இதையடுத்து, அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது மகள் சட்டவிரோதமாக பார் நடத்தவில்லை. அவருக்கு 18 வயது தான் ஆகிறது, கல்லூரியில் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்து இருந்தார்.
ஆனால், குணால் விஜய்கர் என்பவர் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பாரில் உணவுகளை சுவைத்து பார்ப்பதற்கு முன்பாக ஸ்மிருதி இராணியின் மகள் ஜோயிஷி இராணியை உணவகத்தின் உரிமையாளர் என அறிமுகப்படுத்தி உரையாடலை தொடங்கி இருப்பார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அங்கு பன்றிக் கறி உணவு கிடைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் ஜோயிஷி இராணியின் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் உணவகத்தில் மாட்டுக்கறி உணவு விற்பனை செய்யப்படுவதாக பரப்பப்படும் மெனு கார்டு தவறானது. அது ப்பேர் டெக், ரேடிசன் ப்ளு ரேசார்ட் உடைய மெனு கார்டு என அறிய முடிகிறது.