பட்டதாரி இல்லை எனக் குறிப்பிட்ட ஸ்மிருதி இரானி | மீண்டும் சர்ச்சை!

பரவிய செய்தி
2014-பாஜகவின் ஸ்மிருதி இரானி இளங்கலைப் பட்டதாரி. 2019- பாஜகவின் ஸ்மிருதி இரானி ப்ளஸ் 2 படித்து முடித்து இருக்கிறார்.
மதிப்பீடு
சுருக்கம்
2019 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஸ்மிருதி இரானி தன் வேட்புமனுவில் தன் இளங்கலைப் பட்டம் குறித்த தகவலை அளிக்கவில்லை என்ற செய்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விளக்கம்
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். இதன்பின், ஸ்மிருதி இரானி பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சரானார். ஸ்மிருதி இரானியின் பட்டப்படிப்பு எப்பொழுதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள ” chandni chowk ” தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், 1993-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்ததாகவும், 1996 ஆம் ஆண்டைக் குறிப்பிட்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் B.A பட்டதாரி எனத் தெரிவித்து இருந்தார்.
இதன்பின், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தன் பிரமாணப் பத்திரத்தில், அதே டெல்லி பல்கலைக்கழகத்தில் B.Com(PART-1) தொலைநிலைக் கல்வி எனக் குறிப்பிட்டு உள்ளார்.
2014 தேர்தலுக்கு பிறகு ஸ்மிருதி இரானியின் கல்லூரி படிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எழுந்தன. ஆனால், ஸ்மிருதி இரானி இதனை மறுத்தார்.
தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட உள்ள ஸ்மிருதி இரானி சமீபத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பட்டம் பெற்றது பற்றி ஏதும் குறிப்பிடாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
ஒருவேளை பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்காமல், தொலைநிலைக் கல்வி பயின்று இருப்பார் என கருதினாலும் ஆண்டுகள் 1994 , 1996 எனவும், ஒரே பல்கலைக்கழகத்தின் பெயரையே 2004, 2014 வேட்புமனுவில் தெரிவித்து இருக்கிறார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பும் தெரிவித்து இருந்தார் ஸ்மிருதி இரானி.
சர்ச்சைகள் வேண்டாம் என நினைத்து பட்டப்படிப்பை குறிப்பிடாமல் இருந்து இருக்கலாம். ஆனால், அதுவே மீண்டும் சர்ச்சையாகி உருவெடுத்துள்ளது.