This article is from Apr 12, 2022

“கடத்தல் மண் எடுத்து தரப்படும்” என்ற பெயர் பலகையால் சர்ச்சை.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

விடியல் ஆட்சியில போர்டு வச்சி கடத்தல் மண் எடுத்து தறாங்களாம் இதுதான் திராவிட மாடல் போல.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோயம்புத்தூர் இடையர்பாளையம் பகுதியில் ” வாசு மணல் சப்ளையர்ஸ் ” என்ற பெயரில் இயங்கி வரும் கடையில் கட்டிடங்களுக்கு தேவையான மணல், செங்கல் , எம் -சான்ட், பி-சான்ட் , ஜல்லி , சிமென்ட் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த கடையின் பெயர் பலகையில் ” கடத்தல் மண் எடுத்துத் தரப்படும் ” என எழுதப்பட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகவும், வைரலாகியும் வருகிறது.

உண்மை என்ன ?

இதுகுறித்து வாசு மணல் சப்ளையர்ஸ் கடை தரப்பில், ” எங்கள் பகுதியில் ஒரு கட்டிடத்தை இடித்த பிறகு அங்கு இருக்கிற மண்ணை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை கடத்தல் மண் என சொல்வது வழக்கம். ஆகாத மண், பயன்படுத்திய மண்ணை வீடுகளுக்கு முன்பாக, மாடு கட்டும் இடங்களில், பழைய கிணறை மூட பயன்படுத்துவார்கள்.  இதை பேச்சு வாக்கில் கடத்தல் மண் என்று சொல்வார்கள் ” எனத் தெரிவித்து இருக்கின்றனர்.

கோவை வட்டார மொழியில் பழைய கட்டிடங்களை இடித்து எடுக்கப்பட்ட மண்ணை வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதை ” கடத்தல் மண் ” எனக் கூறுகிறார்கள். வீடுகளின் முன்பாக மண்ணை கொட்டி நிரப்பவும், சாலைகளை சமன் செய்ய மற்றும் பழைய கிணறுகளை மூடவும் இடிக்கப்பட்ட கட்டிடத்தின் கழிவுமண்ணை பயன்படுத்துகின்றனர்.

Archive link 

கடையின் பெயர் பலகை சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகியதால், ” கடத்தல் மண் ” என்ற பெயர் பலகையை மாற்றும்படி கோவை துடியலூர் காவல்நிலையம் சார்பில் இடையார்பாளையம் பகுதி மணல் விநியோகஸ்தர்க;ளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ” வாசு மணல் சப்ளையர்ஸ் ” தங்கள் கடை பெயர் பலகையில் ” கட்டிடம் இடித்த மண் எடுத்து தரப்படும் ” என புதிய ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், கோவையில் கடத்தல் மண் எடுத்து தரப்படும் என கடை பெயர் பலகையில் குறிப்பிட்டு இருப்பது பழைய கட்டிடங்களில் இடித்ததில் இருந்து எடுக்கப்படும் மண்ணைக் குறிக்கிறது என்பதையும், அந்த பெயர் பலகை சர்ச்சையானதால் அதை கட்டிடம் இடித்த மண் எடுத்து தரப்படும் என கடை தரப்பில் மாற்றப்பட்டு உள்ளதையும் அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button
loader