பாம்பு கடிக்கு காதில் எண்ணெய் ஊற்றுவது, கரு ஊமத்தை என பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ? சித்த வைத்தியத்தால் முடியும்.. பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை . பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும். கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள ” அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும். மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறுபக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம் “. அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3லிருந்து 5 சொட்டு விடவும். மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.(இந்த செய்தியை பகிருங்கள் … )

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

மேற்காணும் தகவல் பாம்புகடிக்கான இயற்கை வைத்தியம் எனக் கூறி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சில இணைய பக்கங்களில் பல ஆண்டுகளாக சுற்றி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இத்தகவல் ஃபேஸ்புக்கில் உலாவி வருகிறது. நாட்டு மருந்து, அது தொடர்பான பெயர்களில் இயங்கும் ஃபேஸ்புக் குழுக்களில் கூட இப்பதிவு பகிரப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கில் ஷேராகிக் கொண்டிருக்கும் இப்பதிவில் பயனுள்ள தகவலை பகிர்ந்ததற்கு நன்றிகள் ஏராளமாய் குவிந்து உள்ளன.

Advertisement

Facebook link | archive link 

” பாம்பு கடித்தவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் ஊற்றி மறுபக்க காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்றும், எண்ணெய் வரவில்லை என்றால் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம் மற்றும் அதன்பிறகு கருஊமத்தை இலையை அரைத்து மூக்கில் 3-ல் இருந்து 5 சொட்டு விட்டால் அவருக்கு உயிர் வந்து விடும் ” ஆகிய வரிகளை படித்தும் இதை உண்மை என நினைத்து பகிரவும், பாராட்டவும் செய்கிறார்கள்.

உண்மை என்ன ? 

இப்படி பாம்பு கடிக்கு பரவும் தகவல் குறித்தும், பாம்பு கடி தொடர்பான செய்ய வேண்டியவை குறித்தும் மருத்துவர் பிரவீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இந்தியாவில் தோராயமாக 230 வகையான பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 1. நல்ல பாம்பு 2. கட்டு விரியன் 3. கண்ணாடி விரியன் 4. சுருட்டை விரியன் ஆகிய 4 வகைகள் மட்டுமே விஷ பாம்புகளாகக் காணப்படுகின்றன. இந்த 4 வகை பாம்புகள் தவிர மற்றவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது, கடிபட்ட இடத்தில வீங்கி சிவந்து போகும்.

Advertisement

இந்த 4 வகைகளில் நல்ல பாம்பு விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நியூரோடாக்சிக் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவரின் பார்வை கோளாறு, பேச்சு, கால்கள் பலவீனம், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சுவாசக் கோளாறுகள், பக்கவாதம் போன்றவை உண்டாக்கக்கூடும்.

கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய இரண்டுமே ஹீமோடாக்ஸிக் நச்சு உடையது. இது இரத்தம் உறைவதை பாதிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் உறைவதில்லை, அவர்களுக்கு பக்கவாதம் மற்றும் உயிருக்கு ஆபத்தான இரத்தபோக்கு ஏற்படலாம். கட்டு விரியன் இரண்டின் கலவையாக இருக்கலாம்.

யாராவது ஒருவருக்கு பாம்பு கடி ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்தால், அதற்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைக் குறித்து படிகள் உள்ளன.

1. பீதி அடைய வேண்டாம்.

2. பாம்பு கடித்த உடல் பகுதியில் இருந்து காலணிகள், மோதிரங்கள், வாட்ச், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அகற்றவும். ஏனெனில், வீக்கம் ஏற்படும் போது அவை இறுக்கமான கயிறு போல செயல்படக்கூடும்.

3. பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரின் கால்களை அசைக்க கூடாது, கால்கள் அசைய முடியாதபடி ஒரு எலும்பு முறிவு கட்டு போன்று லேசாக கட்டி வைக்கவும்.

4. கயிறு அல்லது வேறு ஏதேனும் வைத்து இறுக்கமாக கட்ட வேண்டாம்.

5. விஷத்தை அகற்ற கடிபட்ட இடத்தில் சோப்பு அல்லது வேறு ஏதேனும் கரைசலை கொண்டு கழுவ வேண்டாம்.

6. கடித்த இடத்தில் அல்லது அதற்கு அருகில் வெட்டு அல்லது கீறல்களை செய்ய வேண்டாம்.

7. எலக்ட்ரிக் ஷாக் பயன்படுத்த வேண்டாம்.

8. கடிபட்ட பகுதியில் ஐஸ்கட்டி அல்லது குளிர்வான பொருளை வைக்க வேண்டாம்.

9. தீங்கு விளைவிக்கும் எந்த வகையான மூலிகை அல்லது நாட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

10. உங்கள் வாயால் விஷத்தை உறிஞ்ச முயற்சிக்காதீர்கள்.

11. பாதிக்கப்பட்டவருக்கு குளிர்பானம், ஆல்கஹால் அல்லது பிற மருந்துகளை கொடுக்க வேண்டாம்.

பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லுங்கள். உயிரைக் காப்பாற்றக்கூடிய மாற்று மருந்து நம்மிடம் உள்ளது.

மனிதர்களின் இரு காதுகளும் தனித்தனி பாதைகளாகும். அவை மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவில்லை. எனவே, இந்த ஃபார்வர்டு தகவலில் கூறியது போன்று எந்த சூழ்நிலையிலும் ஒரு காது வழியாக ஊற்றி மற்றொரு காது வெளியாக வராது. மேலும், கருஊமத்தை பாம்பு கடிக்கு மாற்று மருந்தாக இல்லை.

இந்தியாவில் உள்ள 4 விஷ பாம்புகளின் விஷத்திற்கு மாற்று மருந்தைக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் உகந்த கவனிப்பு இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும்.

மேலும் படிக்க : ஃபேஸ்புக்கில் உடல்நலம் சார்ந்த போலியான தகவல்கள் பில்லியன் கணக்கான பார்வையை பெறுகிறது – அவாஸ் அறிக்கை.

இதற்கு முன்பாக, ஃபேஸ்புக் தளத்தில் பரவும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த போலியான தகவல்கள் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது என கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதுபோன்ற, போலியான சுகாதார மற்றும் மருத்துவ தகவல்கள் அதிக அளவில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button