‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி’ என தந்தைப் பெரியார் சொன்னாரா?

பரவிய செய்தி
“பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி” என்று பெரியார் கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
“பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி”
இந்த வாசகத்தை தந்தைப் பெரியார் சொன்னதாக ஒரு புரளி பல ஆண்டுகளாகவே பரவி வருகிறது.
விளக்கம்
உண்மை என்ன?
“பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி”
உண்மையில் இந்த வாசகத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் பெரியார் அல்ல. அவர் பெவிர்லி நிக்கோலஸ் எனும் ஆங்கிலேய எழுத்தாளர். தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரான ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ‘காந்தியார் சாந்தியடைய’ எனும் நூலில் இதனைக் குறித்த தகவல் உள்ளது.
” ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே’ என்று ஒரு பழமொழி இன்னும் புது மொழியாக இங்கு இருக்கிறது” என்று ஒரு அறிஞர் கூறுகிறார்.
அப்படிக் கூறியது, கருப்புச் சட்டைக்காரனுமல்ல கருப்பனுமல்ல வெள்ளைக்காரன். ‘பெவிர்லி நிக்கோலஸ்’ என்பவர், குமரி முதல் காஷ்மீர் வரை எல்லா இடங்களையும், மக்களையும் பார்வையிட்டு, நிலை தெரிந்து ஆராய்ந்து, அதன் பின்னர் இந்தியாவைப் பற்றி Verdict on India என்றொரு புத்தகம் எழுதினார். அதிலேதான் குறிப்பிட்டிருக்கிறார். ‘பாம்பைக் கொல்லாதே’ என்று.” இவ்வாறாக தன் நூலில் ப.திருமாவேலன் எழுதியுள்ளார்.
‘பெவிர்லி நிக்கோலஸ்’ எழுதிய Verdict On India நூலில் கீழ்கண்டவாறு அவர் எழுதியுள்ளார். ” Ancient saying , still current, is ‘ if you meet a snake and a Brahmin, kill the Brahmin’.” அதாவது , “‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் , பார்ப்பானை கொன்றுவிடு’ எனும் பழமொழி இங்கு புதுமொழியாகவே உள்ளது” என்று எழுதியுள்ளார்.
ஆனால் தந்தைப் பெரியார் , வேறொரு வாசகத்தை எழுதியுள்ளார்.
“உயர்ந்த ஜாதி என்று எவனெவன் திமிரோடு உங்கள் முன் வருகிறானோ, அவனைக் குறுக்கே வரும் பாம்பைப் போல் கருதி தூக்கி அடிக்க வேண்டும். அதுதான் ஜாதி ஒழிப்புக்குச் சரியான மருந்து. அது இன்ஜெக்ஷன் (ஊசி மருந்து) மாதிரி உடனே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.” (விடுதலை: 27-2-1948)
இங்கே அவர் ‘பார்ப்பானை அடிக்கவேண்டும்’ என்பதைப் போன்று எதையும் சொல்லவில்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில் “பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி” என்று பெரியார் கூறினார் என்பது போலியான செய்தி என்று தெளிவாகிறது. ” ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் , பார்ப்பானை கொன்றுவிடு’ எனும் பழமொழி இங்கு புதுமொழியாகவே உள்ளது.” என்று ‘Verdict on India’ என்ற தன் நூலில் ‘பெவிர்லி நிக்கோலஸ்’ எனும் ஆங்கிலேய எழுத்தாளர் எழுதியிருக்கிறார் என்று அறிய முடிகிறது.