20 ஆண்டுகளாக லண்டன் SOAS பல்கலைக்கழக்தில் இருக்கும் வள்ளுவர் சிலை !

பரவிய செய்தி
லண்டன் SOAS பல்கலைகழகத்தில் ஆதி தமிழர், தமிழ் இனத்தின் பெருமை திருவள்ளுவர் ஐயா உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. SOAS பல்கலைகழகத்திற்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகள் பல.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ் மொழியை உலகமறியச் செய்வதில் ” உலகப்பொதுமறையான ” திருக்குறளுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கும். அத்தனை சிறப்புமிக்க தமிழ் நூலினை இயற்றிய அய்யன் வள்ளுவரின் சிலைகள் உலகின் ஏதோவொரு பகுதியில் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் நிறுவப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
லண்டன் நகரில் உள்ள SOAS பல்கலைகழகத்தில் திருவள்ளுவரின் உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளதாக மீம் பதிவுகளை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் மீம் பதிவு ஒன்றை அனுப்பி இருந்தார். SOAS பல்கலைகழகத்தில் உள்ள திருவள்ளுவரின் சிலையின் பின்னணி குறித்து அறிய முயன்றோம்.
SOAS பல்கலைகழகம் :
லண்டன் நகரில் உள்ள உயர் படிப்பிற்கான SOAS பல்கலைகழகத்தில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. 2017 மே 13-ம் தேதி திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சியில் பேசிய ராமசாமி பாலாஜி( First Secretary, Indian High Commission ) புகைப்படங்கள் அப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
” SOAS பல்கலைகழகத்தில் உள்ள தமிழ் ஆய்வுகளின் வரலாற்றையும், எங்களின் பட்டப்படிப்புகளில் தமிழ் மொழி கற்பித்தலை மீண்டும் கொண்டு வருவதற்கான எங்கள் உறுதியை கொண்டாட ஒரு அற்புதமான வாய்ப்பாக இன்று குறிக்கிறது ” என ராமசாமி பாலாஜி பேசியுள்ளார்.
அங்குள்ள தமிழ் மக்கள் SOAS பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் அருகே ஜனவரி 16-ல் பொங்கல் நாளில் கோலமிட்டு, பறை இசைத்து கொண்டாடிய புகைப்படங்களும் இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் SOAS பல்கலைகழகத்தில் உள்ள தமிழ் மாணவர்கள் தங்களின் பட்டமளிப்பின் போதும் திருவள்ளுவர் சிலையின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் பகுதியில் அய்யன் வள்ளுவரின் சிலை நிலைத்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.