சாலமன் பாப்பையா IPC 497 தொடர்பாக கருத்து தெரிவித்தாரா ?

பரவிய செய்தி
திருமண உறவிற்கு வெளியேயான உறவு குற்றமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பேராசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா வெளியிட்ட எதிர்ப்பு கட்டுரை.
மதிப்பீடு
சுருக்கம்
கணவன் மனைவி உறவுக்கு வெளியேயான பாலியல் உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளியான கட்டுரை பதிவிடப்பட்ட முகநூல் பக்கம் தன்னுடையது அல்ல, அக்கருத்தும் என்னுடையது அல்ல என்று சாலமன் பாப்பையா மறுப்பு தெரிவித்து உள்ளார்.
விளக்கம்
சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு கணவன் மனைவி திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு குற்றமில்லை எனவும், சட்டப்பிரிவு 497-ஐ ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கினர். இதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு கணைகள் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக தாக்கின.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேராசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியது. இந்த கட்டுரை உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் தீர்ப்பை கடுமையாக சாடி இருந்தது. ஆகையால், இக்கட்டுரை ஆயிரக்கணக்கான லைஸ், ஷேர்களை பெற்றது. மேலும், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.
இருப்பினும், சாலமன் பாப்பையா அவர்களின் பெயரில் வெளியான கட்டுரை அவருடையதே அல்ல. எனினும், அது அவருடைய கருத்தே என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சர்ச்சையான கட்டுரை அவருடையது அல்ல என்பதற்கான ஆதாரங்கள்.
- சாலமன் பாப்பையா அவரின் பெயரில் உள்ள முகநூல் பக்கம் அவருடையதே அல்ல. அந்த முகநூல் பக்கத்தில் சாலமன் பாப்பையாவின் fan page ( unofficial page) என குறிப்பிடப்பட்டுள்ளது. அது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் அல்ல.
- “ Forwarded as received “ என அக்கட்டுரையின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. முதலில் Forwarded as received மட்டுமே இருந்துள்ளது. பின்னர் வாட்ஸ் ஆஃப் பகிர்வு என குறிப்பிட்டுள்ளனர்.
- “ அது என்னுடைய முகநூல் பக்கமே அல்ல, எனக்கு முகநூலில் எந்த பக்கமும் இல்லை. அது நம்முடைய துறை இல்லை பின் எவ்வாறு கருத்து சொல்ல முடியும். இது குறித்து காவல்துறையிடம் விளக்கம் அளித்து புகார் அளித்துள்ளேன் என சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.
- இறுதியாக, சட்டப்பிரிவு 497 தொடர்பான கட்டுரை தாம் வெளியிடவில்லை என சாலமன் பாப்பையா தனியார் பத்திரிகை ஒன்றில் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
ஒரு பிரபலத்தின் பெயரில் எந்த ஒரு தகவல் வெளியாகினாலும் அது உண்மையா என்பதை அறிந்த பின்னர் பகிர்வதே நல்லது.