This article is from Feb 06, 2021

சோமாலியாவிற்கு பிறகு சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக இந்தியா மாறுகிறதா ?

பரவிய செய்தி

சொந்தமாக விமான சேவை இல்லாத இரண்டாவது நாடாக மாறியது இந்தியா.  சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய முதல் நாடு சோமாலியா(1990).

மதிப்பீடு

விளக்கம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. 2020-ல் ஏர்இந்தியா விற்பனை செய்யப்படுவது தொடர்பாக வரையப்பட்ட ஓவியத்தை வைத்து, ” 1990-ல் சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய முதல் நாடு சோமாலியா என்றும், இந்தியா இரண்டாவது நாடாக மாறியதாக ” குறிப்பிட்டு பகிர்ந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?

ஏர்இந்தியா விமான சேவையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவித்தது உண்மையாக இருந்தாலும், சோமாலியா சொந்தமாக விமான சேவை இல்லாத முதல் நாடாக இருப்பதாகவும், இந்தியா இரண்டாவது நாடாக மாறி இருப்பதாகக் கூறுவது தவறான தகவல்.

1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சோமாலி ஏர்லைன்ஸ் 1977-ம் ஆண்டு முழுவதுமாக சோமாலியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. 1991-ம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக சோமாலி ஏர்லைன்ஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதை தனியாருக்கு விற்பனை செய்யவில்லை. உள்நாட்டு போரின் விளைவால் நிறுத்தப்பட்ட சோமாலி ஏர்லைன்ஸ் சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு லைவ்மின்ட் செய்தியில், ” Centreforaviation.com இணையதளத்தில் CAPA உடைய ஆய்வாளர்கள் குழு வெளியிட்ட கட்டுரையில் இருந்து பிரிக்கப்பட்ட விளக்கப்படத்தில், பல அரசுகள் தங்களுக்கு சொந்தமான விமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்த பிறகு அந்த நிறுவனங்களில் உள்ள அரசாங்க பங்குகளை காட்டுவதாக ” விளக்கப்படத்தை வெளியிட்டு இருந்தது.

Centreforaviation தகவலில், பிரிட்டிஷ் ஏர்வெஸ் மற்றும் ஜப்பான் ஏர்லைன்(JAL) ஆகியவற்றில் அந்நாட்டு அரசாங்கத்தின் பங்குகள் 0% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வெஸ் 1987-ம் ஆண்டு தனியார்மயமாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வெஸ் நிறுவனத்தில் கத்தார் ஏர்வேஸ் தனது பங்கை 25% ஆக உயர்த்தியது.

இப்படி பல நாடுகள் தங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதும், மீண்டும் கையகப்படுத்துவதும் நடவடிக்கையை செய்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தங்களுக்கு சொந்தமான விமான சேவையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு தனியாரால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. சொந்தமாக விமான சேவையும், விமான நிலையமும் இல்லாத நாடுகளும் கூட இருக்கின்றனர்.

முடிவு :

நம் தேடலில், 1990-ல் சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய முதல் நாடு சோமாலியாவிற்கு பிறகு சொந்தமாக விமான சேவை இல்லாத இரண்டாவது நாடாக மாறியது இந்தியா எனப் பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader