மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் சொல்லாத சோனியா காந்திக்கு மோடி வணக்கம் சொல்லவில்லை பரவும் இரண்டு பொய்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சோனியா காந்திக்கு அவர் வணக்கம் செலுத்தினார். ஆனால், பதிலுக்குச் சோனியா காந்தி வணக்கம் செலுத்த வில்லை.
வித்தியாசம் தெரியுதா ..??? pic.twitter.com/y5o5FC2n9V
— கைப்புள்ள (@kaippulla123) September 19, 2023
தற்போது மோடி பிரதமராக இருக்கும் நிலையில், சோனியா காந்தி வணக்கம் செலுத்தினார். பதிலுக்கு மோடி வணக்கம் செலுத்தவில்லை என இரண்டு புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Caption this. pic.twitter.com/BMZ7jGLsDS
— PuNsTeR™ (@Pun_Starr) September 19, 2023
இதே போல் மோடி வணக்கம் செலுத்தினார், சோனியா காந்திதான் வணக்கம் செலுத்த வில்லை என்றும் வேறொரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவும் புகைப்படங்கள் குறித்து யூடர்ன் ஆய்வு செய்ததில் அனைவரும் ஒருவருக்கொருவர் இயல்பாக வணக்கம் செலுத்தி இருப்பதைக் காண முடிந்தது.
முதலில் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் குறித்துப் பரப்பப்படும் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அது 2014ம் ஆண்டு இந்திய அரசின் விருது வழங்கும் விழாவின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
புகைப்பட விற்பனை தளமான ‘Getty Images’ இது தொடர்பான படங்கள் உள்ளது. 2014, பிப்ரவரி மாதம் சச்சின் தெண்டுல்கர் மற்றும் சிஎன்ஆர் ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டபோது அப்படம் எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் இருவரும் வணக்கம் தெரிவித்துக் கொள்ளும் படங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
அடுத்ததாக மோடி மற்றும் சோனியா காந்தி குறித்துப் பரவும் படம் பற்றித் தேடினோம். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டாலும் அதிகாரப் பூர்வமான பணிகள் நேற்றைய தினம் (செப்,19) தான் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்டதுதான் மோடி மற்றும் சோனியா காந்தி வணக்கம் குறித்தான புகைப்படங்கள்.
சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு வணக்கம் சொல்லும் படம் ‘News 18’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதே போல் மோடி சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன், மல்லிகார்ஜுன கார்கேவிற்கு வணக்கம் சொல்லும் படம் ‘Live Mint’, ‘The Statesman’ தளத்தில் உள்ளது.
மேற்கொண்டு இது பற்றித் தேடியதில் பாராளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்யக்கூடிய ‘Sansad TV’ யூடியூப் பக்கத்தில் பதிவான வீடியோ ஒன்றும் கிடைத்தது. அதில், 25வது வினாடிக்கு மேல் மோடி வருவதையடுத்து சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் எழுந்து நிற்கின்றனர். அப்போது கேமராவின் கோணம் மாற்றப்படுவதால் துல்லியமாக என்ன நடந்தது என்பதைக் காண முடியவில்லை. ஆனால், மோடி அவர்களுக்கு முன்னாள் நின்று வணக்கம் கூறுவதைப் போல் கைகளைக் கூப்புவதைக் காண முடிகிறது.
செய்திகளில் வெளியான படங்களையும் இந்த வீடியோவில் உள்ள காட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இருவரும் வணக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இவற்றில் இருந்து ஒருவர் வணக்கம் செலுத்தி மற்றொருவர் வணக்கம் செலுத்துவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்களைத் தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சோனியா காந்தி அவருக்கு வணக்கம் செலுத்த வில்லை. தற்போது மோடி பிரதமராக இருக்கும் நிலையில் சோனியா காந்திக்கு மோடி வணக்கம் செலுத்தவில்லை எனப் பரவும் தகவல்கள் உண்மை அல்ல. அனைவரும் ஒருவருக்கொருவர் பதில் வணக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.