This article is from Jan 25, 2022

2011-ல் சோனியா காந்தியின் மருத்துவ செலவிற்கு ரூ.1880 கோடியை அரசு செலவிட்டதா ?

பரவிய செய்தி

2011 இல் சோனியா காந்தியின் மருத்துவ செலவுக்கு 3 வருடத்துக்கு 1880 கோடி ரூபாய் அரசு பணத்தில் செலவு செய்துள்ளார்கள்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

2011-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது சோனியா காந்தியின் 3 ஆண்டுகளுக்கான மருத்துவ செலவிற்கு ரூ.1880 கோடியை அரசு பணத்தில் இருந்து செலவு செய்து உள்ளார்கள் என 2012 வெளியான செய்தி பக்கம் உடன் மீம் பதிவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

கடந்த ஜனவரி மாதம் பரவிய மீம் பதிவை தற்போது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் மீம் பதிவில், அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ செலவிற்கு ரூ.1880 கோடியை அரசு செலவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியதாக 2012 அக்டோபரில் வெளியான ஒன் இந்தியா செய்தியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதேசெய்தியில், அப்போதைய குஜராத் முதல்வராக நரேந்திர மோடி சோனியா காந்தியின் மருத்துவ செலவு குறித்து புகார் எழுப்பி இருப்பதையும் குறிப்பிட்டு உள்ளது.

2012-ல் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவு குறித்த எழுப்பிய குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, சோனியா காந்தியின் மருத்துவ செலவு குறித்து எழுந்த குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் மறுத்து விளக்க அறிக்கை அளித்து இருந்தது.

” ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து அதிகளவு செலவுகள் ஏற்பட்டதாக குறிப்பிட்ட சில தரப்பினரை மேற்கோள்காட்டி ஊடகச் செய்திகள் பிரதமரின் அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 1880 கோடி செலவு எனக் கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் தவறானவை. இந்த தகவலை ஒன்றிய தகவல் ஆணையர் ஏற்கனவே மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரசாங்கம் எந்தச் செலவும் செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் பதிவு செய்ய விரும்புகிறது. அவருக்கான சிறப்பு பாதுகாப்புக் குழு(SPG) செலவுகளை ஏற்கிறது. அவர் ஒரு முறை மட்டுமே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மரியாதையைப் பெற பெல்ஜியம் நாட்டிற்கு சென்றார். இந்த பயணத்திற்கான மொத்த செலவு ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. அதை ஐசிசிஆர் செலுத்தியது ” என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக 2012 அக்டோபர் 5-ம் தேதி இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்பாக, மருத்துவ செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நவீன் குமார் என்பவர் எழுப்பிய கேள்விக்கு, ” சோனியா காந்தி தரப்பில் எந்த மருத்துவ செலவிற்கான பில்களும் சமர்பிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசாங்கம் எந்த செலவும் செய்யவில்லை. இது தனிநபர் விவகாரம், இதற்கும் அரசிற்கும் சம்பந்தமில்லை ” என ஒன்றிய தகவல் ஆணையம் தரப்பில் 2012 மே மாதமே பதில் அளிக்கப்பட்டு இருந்ததாக லைவ் மின்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பிரதமர் மோடி அணியும் உடைகள் அரசு பணத்தில் இல்லையா ?| RTI தகவல்.

இதேபோல், 2018-ல் பிரதமரின் தனிப்பட்ட உடைக்கான செலவுகள் குறித்து எழுப்பப்பட்ட ஆர்டிஐ கேள்விக்கு, அது அரசு கணக்கில் வராது என பிரதமர் அலுவலகம் பதில் அளித்து இருந்தது. இது 1998 முதல் தற்போது வரை உள்ள பிரதமர்களின் உடைக்கான செலவு குறித்த கேள்வியில் வெளியான தகவல்.

முடிவு : 

நம் தேடலில், 2011-ல் சோனியா காந்தியின் மருத்துவ செலவுக்கு 3 வருடத்துக்கு 1880 கோடி ரூபாய் அரசு பணத்தில் செலவு செய்துள்ளார்கள் என பரவும் தகவல் தவறானது. இது உண்மைக்கு புறம்பானது என 2012-ம் ஆண்டிலேயே பிரதமர் அலுவலகம் தரப்பில் மறுத்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader