பாஜகவினர் அமேசான் டெலிவரி பாயை சிறைப்பிடித்து ரகளை செய்ததாக கிண்டல் வதந்தி !
பரவிய செய்தி
சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை தடை செய்யக்கோரி அமேசான் டெலிவரி பாயை சிறைப்பிடித்து ரகளை செய்த பாஜக உறுப்பினர்கள் கைது.
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியது. திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல் ஆதரவு இருப்பதால், சமூக வலைதளங்களில் அத்திரைப்படம் குறித்த பதிவுகள், மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை தடை செய்யக்கோரி அமேசான் டெலிவரி பாயை சிறைப்பிடித்து ரகளை செய்த பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ் 7 தமிழ் செய்தி ஊடகத்தின் முகநூல் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த நியூஸ் கார்டு குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மையில், அப்படி எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை. வேண்டுமென்றே கிண்டலுக்காக யாரோ நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு டெம்ப்ளடட்டில் இப்படியொரு செய்தியை எடிட் செய்து பரப்பி வருகிறார்கள். அதிலும், இது நியூஸ் 7 தமிழின் பழைய நியூஸ் கார்டு டெம்ப்ளட். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் பெயர் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறித்த செய்தி மட்டுமே இருக்கிறது.
நீட், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் அவருக்கு எதிரான பதில் கருத்துக்களை பாஜகவை சேர்ந்தவர்கள் வெளியிட்டு வந்தனர். ஆகையால், பாஜகவினரை கிண்டல் செய்யும் வகையில் இப்படியொரு போலியான செய்தியை உருவாக்கி பரப்பி வருகிறார்கள்.